Published : 27 Jun 2014 08:48 AM
Last Updated : 27 Jun 2014 08:48 AM

ஆந்திரத்தில் பரிதாபம்: கெயில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் பலி

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் எரிவாயு பைப் லைன் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை நேரிட்ட இந்த கோர விபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 15 பேர் உடல் கருகி பலியாயினர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணா மாவட்டத்துக்கு ஓ.என்.ஜி.சி. எரிவாயு, பைப்லைன் மூலமாக லான்கோ உள்ளிட்ட 3 தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

பழுதடைந்த குழாய்கள்

மத்திய அரசின் கெயில் நிறுவனம் இதனை நிர்வகித்து வருகிறது. இதன் மூலம் 75 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அமைத்த இந்த பைப்லைன்களில் ஆங்காங்கே துருப்பிடித்து குழாய்கள் பழுதடைந்துள்ளன.

இது குறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சில மாதங் களுக்கு முன்னர் பைப் லைன்கள் பழுது பார்க்கப்பட்டன. ஆனால் சேதமடைந்த குழாய்களை மாற்றி அமைக்கவில்லை.

எரிவாயு கசிவு

இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம், மாமிடிகூடூரு மண்டலத்தில் உள்ள நகரம் என்ற கிராமத்தில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த எரிவாயு பைப்லைனில் வியாழக்கிழமை இரவு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50 குடிசை வீடுகளும் டீக்கடை, ஓட்டல், மளிகை கடை என 10 கடைகளும் உள்ளன.

நகரம் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு கசிவு ஏற்பட்டது யாருக்கும் தெரிய வில்லை. இந்த கசிவு இரவு முழுவதும் பரவி சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு காற்றில் கலந்துள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடையில், கடைக்காரர் அடுப்பு பற்றவைக்க தீ மூட்டி உள்ளார். அப்போது எரிவாயு குபீரென தீப்பற்றி ஊர் முழுவதும் தீ பரவியது. டீக்கடைக்காரரும் உடனிருந்த மற்றொருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த விவசாயியும் அவரது மகளும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

அதிகாலை நேரம் என்பதால் குடிசை வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பலர் தீ ஜுவாலைகளுக்கு பலியாயினர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து பயங்கர சத்தத்துடன் பைப்லைன் வெடித்துச் சிதறியது. இதனால் சுமார் 200 அடி உயரத்துக்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

31 பேர் படுகாயம்

இந்த தீ விபத்தில் சுமார் 10 ஏக்கர் தென்னை மரங்கள் முழுவதுமாக தீயில் கருகின. வாழை, நெற்பயிர்கள், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளும் தீயில் கருகின. இவை தவிர பைக்குகள், சைக்கிள்கள், மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் என பல்வேறு வாகனங்களும் தீக்கிரையாகின. எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்டது. கிராம மக்கள் உயிர் பிழைக்க பல கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடினர்.

சம்பவம் நடந்து இரண்டு மணி நேரம் கழித்துதான் ஆம்புலன்ஸ், மற்றும் தீயணைப்புப் படையினர் வந்ததாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்குள் குடிசைப்பகுதி முழுவதும் தீ பரவி சம்பவ இடத்திலேயே மொத்தம் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அமலாபுரம், காக்கிநாடா, ராஜமுந்திரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ருத்ரநாகவேணி, சுஜாதா, கோகிலா, நரசிம்மமூர்த்தி, நாகேஸ்வர ராவ், சின்னா, பாலாஜி, அனந்த லட்சுமி, கிருஷ்ண தேஜா, ராமலட்சுமி, சாய் கணேஷ், மதுசூதன், மோகன கிருஷ்ணா, வாசு உள்பட 15 பேர் பலியானதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

படுகாயம் அடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களது உடலில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

முதல்வரின் பயணம் ரத்து

சம்பவ இடத்துக்கு மாநில உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா, கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் நீது குமார் பிரசாத் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை விரைவு படுத்தினர்.

டெல்லி சென்றிருந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் அவர் தெரிவித்தார். இது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் கலந்தாலோசித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததோடு இது குறித்து விசாரணை நடத்தி தகவல் அனுப்பும்படி ஆந்திர மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல் நரசிம்மனுக்கு உத்தரவிட்டார்.

பிரதமர் மோடி இரங்கல்

இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடியும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க அவர் உத்தரவிட்டார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை குழு அமைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x