Published : 30 Jun 2021 03:13 AM
Last Updated : 30 Jun 2021 03:13 AM

கணவரைப் பிரிந்து எலுமிச்சை ஜூஸ் விற்ற பெண்: காவல் துறை உதவி ஆய்வாளராகி சாதனை

காவல் உதவி ஆய்வாளர் ஆனி.

திருவனந்தபுரம்

கேரளாவில் கணவரைப் பிரிந்து எலுமிச்சை ஜூஸ் விற்று வாழ்க்கையை ஓட்டிய பெண் ஒருவர், காவல் துறை உதவி ஆய்வாளராகி சாதனை படைத்துள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிரங்குளத்தைச் சேர்ந்தவர் சிவானந்த். இவரது மகள் ஆனி. காஞ்சிரங்குளம் அரசு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒன்றரை ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதியினர் பிரிந்துவிட்டனர். அப்போது ஆனிக்கு 8 மாதத்தில் கைக்குழந்தை இருந்தது. 19 வயதிலேயே கைக்குழந்தையுடன் கணவனைப் பிரிந்த ஆனியை, காதல் திருமணம் செய்த கோபத்தில் பெற்றோரும் கைவிட்டனர். இதனால் தனது பாட்டியின் கூரை வீட்டில் குழந்தையுடன் வசித்தார் ஆனி.

குழந்தைக்கு தாய்பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு சோப், மசாலா போன்ற பொருள்களை வீடு, வீடாக சென்று விற்பனை செய்தார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டினார். வர்கலையில் நடக்கும் சிவகிரி தீர்த்தாடன திருவிழாவில் ஐஸ் க்ரீம், எலுமிச்சை சாறும் விற்றார். இதனிடையே உறவினர் ஒருவர் காவலர் தேர்வு குறித்துச் சொல்ல அதற்கும் தயார் ஆகி வந்தார். குழந்தையை வளர்த்துக்கொண்டும், கிடைத்த வேலையைப் பார்த்துக் கொண்டும் தனது நெருக்கடியான சூழலிலும் பி.ஏ. சமூகவியல் படித்து முடித்தார் ஆனி. இப்போது எலுமிச்சை ஜூஸ் விற்ற அதே வர்கலைப் பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஆகியிருக்கிறார் ஆனி. முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், மோகன்லால் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆனி, இந்து தமிழ் திசையிடம் கூறும்போது, “என்னை நானே இந்த சமூகத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளத்தான் ஆண் போன்ற சிகையலங்காரம் செய்து கொண்டேன். தேவையற்ற நபர்களின் பார்வையில் இருந்து அந்த வகையில் தற்காத்துக் கொண்டேன். கோயில் திருவிழாவிலும், சுற்றுலா தலங்களிலுமாக நான் ஜூஸ் விற்ற வர்கலையிலேயே பணி கிடைத்துள்ளது. இருந்தும் என் மகனுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என அவரை எர்ணாக்குளத்தில் படிக்க வைத்துள்ளேன். அங்கு பள்ளிப்படிப்பைத் தாண்டி அவனை நீச்சல், விளையாட்டு என சகல வகுப்புகளிலும் சேர்த்திருக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x