Published : 26 Jun 2021 10:29 AM
Last Updated : 26 Jun 2021 10:29 AM

சீரம் நிறுவனத்தின் 2-வது கரோனா தடுப்பூசி கோவோவாக்ஸ்: உற்பத்தி தொடங்கியது

புதுடெல்லி

சீரம் மருந்து நிறுவனத்தின் 2-வதாக தடுப்பு மருந்து ‘‘கோவோவாக்ஸ்" உற்பத்தி தொடங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார். விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.

இந்தியாவில் தற்போது கோவாக்ஸின், கோவிஷீல்ட் மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு மருந்துகள் உலகின் பல நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இதில் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் செயல்பட்டு வரும் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்ட் மருந்தைத் தயாரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் மருந்தை ‘‘கோவோவாக்ஸ்" என்ற பெயரில் தயாரிக்க அனுமதி பெற்றது. கரோனா வைரஸுக்கு எதிராக சீரம் நிறுவனம் தயாரிக்கும் 2-வது மருந்து இதுவாகும்.

கோவோவாக்ஸ் தடுப்பூசி பிரிட்டனிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் பரிசோதனை செய்யப்பட்டதில் 89.3 சதவீதம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இயல்பான கரோனா வைரஸுக்கு மட்டுமல்லாமல் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் வகைகளுக்கும் எதிராக கோவோவேக்ஸ் சிறப்பாகச் செயல்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த மருந்தின் பரிசோதனை இந்தியாவில் தொடங்கியது. இந்தநிலையில் கோவோவாக்ஸ் கரோனா தடுப்பூசி பரிசோதனை முடிந்து உற்பத்தி தொடங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீரம் மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியதாவது:

‘‘கோவோவாக்ஸ் தடுப்பூசி தயாரிப்பை புனேவில் சீரம் நிறுவனம் தொடங்கியுள்ளதை, மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறோம். இந்த மருந்துக்கான பரிசோதனைகள் அனைத்தும் விரைவில் முடியும்.
இந்தத் தடுப்பூசி அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சீரம் மருந்து நிறுவனம் தயாரிக்கிறது. 18- வயதுக்கு குறைந்தவர்களுக்கு இந்த மருந்து சிறப்பாக செயல்படும் என நம்புகிறோம்’’

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x