Published : 26 Jun 2021 03:11 AM
Last Updated : 26 Jun 2021 03:11 AM

51 நாட்களில் 28 மாநிலங்களில் சாகச பயணம் செய்த தாய், மகன்

கேரளாவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் மித்ராவும் அவரது மகன் நாராயணனும் 51 நாட்களில் 28 மாநிலங்களில் காரில் சாகச பயணம் மேற்கொண்டனர்.

கொச்சி

கேரளாவின் கொச்சி நகரில் அமைந்துள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் துணை பேராசிரியராக மருத்துவர் மித்ரா சதீஷ் (40) பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சதீஷ். இத்தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

சாகச பயணத்தில் அதிக ஆர்வம் கொண்ட மித்ரா கடந்த மார்ச் 17-ம் தேதி தனது மகன் நாராயணனுடன் (10) காரில் சாகச பயணத்தை தொடங்கினார். கொச்சியில் இருந்து தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்குவங்கம், வடகிழக்கு மாநிலங்கள் என 51 நாட்களில் 28 மாநிலங்களுக்கு தாயும் மகனும் சுற்றுப் பயணம் செய்துள்ளனர்.

கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இருவரும் மக்கள்அதிகம் கூடும் இடங்களை தவிர்த்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் கரோனா பரிசோதனை செய்துள்ளனர். பாதுகாப்புக்காக பயணம்முழுவதும் இந்திய சுற்றுலா துறையுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி பயணத்தை தொடர்ந்துள்ளனர்.

இதுகுறித்து மித்ரா சதீஷ் கூறியதாவது:

காரில் சாகச பயணம் செல்வதில் எனக்கு அதீத விருப்பம். இதற்கு எனது கணவரும் குடும்பத்தினரும் முழுஆதரவு அளிக்கின்றனர். உலகம் முழுவதையும் காரில் சுற்றி வர வேண்டும் என்பது எனதுபேராசை. முதல்கட்டமாக 100 நாட்களில் இந்தியாவை காரில் சுற்றிப் பார்க்க முடிவு செய்தேன். கரோனா அச்சுறுத்தல் காரண மாக பயணத்தை 51 நாட்களாக குறைத்து கொண்டேன்.

எனது மூத்த மகள் மாற்றுத் திறனாளி என்பதால் அவளை என்னுடன் அழைத்து செல்ல முடியவில்லை. இளைய மகனும் நானும் எங்களது காரில் சாகச பயணத்தை தொடங்கினோம். மேற்குவங்கத்தில் டெரகோட்டா டைஸ்ஸ் செய்வது குறித்தும் அசாமில் மண் பானை வனைதல் குறித்தும் கற்றுக் கொண்டோம்.

வடகிழக்கில் சைவ உணவு கிடைப்பது கடினம். ஆனால் அங்கும் எங்களுக்கு சைவ உணவுதாராளமாக கிடைத்தது. காடு, மலை, பள்ளத்தாக்கு, பனி, மேகம்,வெயில் என அனைத்து வகையான நிலபரப்புகளையும் வானிலைகளையும் கடந்து சென்றோம். பழங்குடிகள், கிராம மக்கள் எனபல்வேறு தரப்பு மக்களை சந்தித்தோம். புதிய கலாச்சாரங்களை கற்றுக் கொண்டோம்.

பல்வேறு மாநிலங்களின் உணவு, மொழிகள், வாழ்வியலை அறிந்து கொண்டோம். நாளொன்றுக்கு 17 மணி நேரம் காரில் பயணம் செய்தோம். இதன்மூலம் 51 நாட்களில் 28 மாநிலங்களில் 16,800 கி.மீ. தொலைவை கடந்தோம். கடந்த மே 6-ம் தேதி பத்திரமாக வீடு திரும்பினோம்.

நூறு நாள் பயணத்துக்கு ரூ.4.5லட்சம் செலவாகும் என்று கணக் கிட்டிருந்தேன். கொரோனாவால் பயண திட்டம் 51 நாட்களாக குறைந்தது. சுமார் 30 நாட்கள் நண் பர்களின் வீடுகளில் தங்கினோம். இதனால் செலவு கணிசமாக குறைந்தது. 51 நாள் பயணத்துக்கு ரூ.1.5 லட்சம் மட்டுமே செலவாகி உள்ளது. வரும்காலத்திலும் எனது சாகச பயணம் தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x