Published : 23 Jun 2021 08:01 PM
Last Updated : 23 Jun 2021 08:01 PM

வரதட்சணை கொடுத்து உங்கள் மகள்களை வியாபாரப் பண்டங்களாக்காதீர்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் இளம்பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், பெற்றோர் வரதட்சனை கொடுத்து தங்களின் மகள்களை வியாபாரப் பண்டங்களாக மாற்றும் போக்கைக் கைவிட வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்மயா நாயர். இவர் ஆயுர்வேத மருத்துவம் இறுதியாண்டு பயின்றுவந்தார். 22 வயதான இவருக்கு கடந்த 2018ல் திருமணம் நடைபெற்றது. கொல்லம் மாவட்டத்தையே சேர்ந்த கிரண்குமார் என்பவருக்கு பெற்றோர் ஏற்பாட்டின் பேரில் திருமணம் முடித்துவைக்கப்பட்டது. கிரண்குமார் மோட்டார் வாகன அலுவலகத்தில் அதிகாரியாக இருக்கிறார்.

திருமணத்தின் போது விஸ்மயாவுக்கு பெற்றோர் 100 சவரன் தங்க நகைகள் போட்டனர். மேலும், கிரணுக்கு ஒரு டொயோட்டோ யாரிஸ் காரும், 1.5 ஏக்கர் நிலமும் வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருக்கிறது.

திருமணத்திற்குப் பின்னர் கிரண்குமார் தனக்குக் கொடுக்கப்பட்ட காரின் மைலேஜ் சரியில்லை எனக் கூறி அதற்குப் பதிலாக பணமாகக் கொடுக்குமாறு கேட்டிருக்கிறார். மேலும் அடிக்கடி மனைவியை அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

இதனால் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்ட விஸ்மயாவை மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் அழைத்துவந்துள்ளார்.
இந்நிலையில் விஸ்மயா நேற்று காலையில் கணவர் வீட்டில் மர்ம்மான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய செல்போனை போலீஸார் பறிமுதல் செய்து சோதித்தபோது அவர் அதிலிருந்து தனது உறவினர் ஒருவருக்கு கணவர் செய்த கொடுமைகள் குறித்த விவரம், புகைப்பட ஆதாரங்கள் இருந்துள்ளன. விஸ்மயாவின் வீட்டாரும் மகள் கொலை செய்யப்பட்டதாகப் போலீஸில் புகார் அளித்தனர். இந்நிலையில், கணவர் கிரண் குமாரும் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தற்போதுள்ள திருமண நடைமுறைகளில் நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. திருமணம் என்பதை பெற்றோர் தங்களின் சொத்து மதிப்பின் பகட்டைக் காட்டும் கண்காட்சி போன்று நடத்தக்கூடாது. வரதட்சணையை ஊக்குவிக்கும் செயல்கள் நம் பெண் பிள்ளைகளை நாமே ஒரு பண்டத்துக்கு நிகராக தரத்தை குறைப்பதற்கு சமம். பெண் பிள்ளைகள் பண்டமல்ல அவர்கள் மனிதர்கள். அவர்களை இன்னும் கவுரவமாக நடத்த வேண்டும்.

— Pinarayi Vijayan (@vijayanpinarayi) June 23, 2021

ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்தும் சமுதாயமே நியாயமான சமுதாயம். அண்மையில் நடந்துள்ள குடும்ப வன்முறைச் சம்பவங்கள் கேரளாவை இன்னும் நியாயமான சமூகமாக மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. அநீதியை ஒழிக்க அரசும் மக்களும் தோளோடு தோள் சேர்ந்து இயங்குவர்" எனத் தெரிவித்துள்ளார்.

இத்துடன் குடும்ப வன்முறைகளில் சிக்கியுள்ள பெண்கள் மாநில அரசின் உதவியைப் பெறுவதற்கான ஹெல்ப்லைன் எண்களையும் வெளியிட்டார்.

குடும்ப வன்முறை தொடர்பான புகார்களை கேரள மாநிலப் பெண்கள் 9497999955 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதற்காக ஒரு சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x