Published : 17 Mar 2014 12:00 AM
Last Updated : 17 Mar 2014 12:00 AM

பாஜக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு எப்போது?- பாமக, தேமுதிக தொண்டர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பாஜக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியல் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே, தொகுதி ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் பாமக தொண்டரும், திருப்பூரில் தேமுதிக தொண்டரும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு செய்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. சனிக்கிழமை மாலை, தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, வடசென்னை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, விழுப்புரம் (தனி), கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பொள்ளாச்சி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதேபோல பாமக (8), மதிமுக (7), பாஜக (8) கட்சிகளுக்கான தொகுதிகளின் உத்தேசபட்டியல் வெளியானது.

ஆனால், இதுவரையில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேசி வருவதாக பாமக தரப்பில் கூறப்பட்டது. இதனால், கட்சிகளின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். திருப்பூர் தொகுதியை தேமுதிகவுக்கு அறிவிக்க வேண்டும் என கூறி அக்கட்சித் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார். இதேபோல், சேலம் தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்கக் கோரி பாமக தொண்டர் ஒருவரும் தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவங்களால் கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கூட்டணியில் எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். கட்சித் தலைவர் விஜயகாந்த் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள்’’ என்றனர். பாஜக தரப்பில் கேட்டபோது, ‘‘கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு முடிந்து விட்டது. தொகுதிப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x