Published : 18 Jun 2021 03:13 am

Updated : 18 Jun 2021 06:07 am

 

Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 06:07 AM

மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் என இருதரப்பிலும் முக்கியத்துவம் பெற்ற ஸ்டாலின் டெல்லி பயணம்

stalin-delhi-visit

புதுடெல்லி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டெல்லி வருகையில் மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் என இருதரப்பிலும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளார். எனினும், அவரது டெல்லி பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில்மேற்கு வங்கத்திற்கு அடுத்தபடியாக தமிழகமும் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்த தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் எதிர்பாராத தோல்வியும் திமுகவிடம் ஏமாற்றமும் பாஜகவுக்கு கிடைத்தது.


இதன் தொடர்சியாக மேற்கு வங்கத்தில் வெள்ள பாதிப்பு களை பார்வையிடச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியுடனான முதல்வர் மம்தாவின் சந்திப்பு முறையாக நடைபெறவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பும் இதுபோல ஆகி விடக்கூடாது என்பதில் பிரதமர் மோடி கவனமாக இருந் துள்ளார். இதை உணர்த்தும் வகையில், தன்னை சந்திப்பதற்கு ஸ்டாலின் கேட்ட தேதியை ஒதுக்கியதுடன் அவரை உற்சாகமாக வரவேற்று பிரதமர் மகிழ்வித்திருந்தார்.

வழக்கமாக இதுபோன்ற சிறப்பு வரவேற்பு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு கிடைத்தது உண்டு. இதன் பின்னணியில் திமுகவை தனக்கு இணக்கமாக வளைப்பது பிரதமர் மோடியின் தந்திரம் என தேசிய அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

திமுகவை இழுக்க முயற்சி

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் டெல்லியின் மூத்த அரசியல்வாதிகள் கூறும்போது, “அதிமுகவில் நிலவும் உட்கட்சி குழப்பங்களால் பாஜக அதிருப்தியாக உள்ளது. அதேசமயம், புதிதாக ஆட்சி அமைத்த திமுகவுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதற்கு மத்திய அரசால் மட்டுமே உதவ முடியும். இதை செய்வதற்காக பாஜக தனது கூட்டணியில் திமுகவை இழுக்க முயற்சிக்கிறது.

இதற்காக திமுக அரசின் கோரிக்கைகளில் சில உடனடியாக ஏற்கப்படலாம். இதைச் செய்தால்தான் மத்திய அரசும் தமிழகம் மீதான இணக்கமான அரசாக தன்னை முன்னிறுத்த முடியும். பாஜகவுக்கு தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப்பு காரணமாக அதனுடன் திமுக கூட்டு சேராவிட்டாலும் ஏதோ ஒருவகையில் மத்திய அரசுடன் நல்லுறவை வளர்க்கும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், எதிர்க்கட்சிகளை அனுசரித்து செல்லவேண்டிய கட்டாயமும் ஸ்டாலினுக்கு உள்ளது” என்றனர்.

தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளில் திரிணமூல் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக திமுகவுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. தேர்தல் வெற்றிக்கு பிறகான இந்த மாற்றத்தின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புகிறார்.

இதற்காக அவர் எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனான தனது சந்திப்பை பிரதமருக்கு அடுத்ததாக அமைத்திருந்தார். தம்மிடம் பிரதமர் மோடி தெரிவிக்கும் கருத்துகள் சிலவற்றை எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பரிமாறிக் கொண்டு தனது முக்கியத்துவத்தை உயர்த்திக்கொள்ள அவர் விரும்பியதாகத் தெரிகிறது.

எதிர்க்கட்சிகளின் விருப்பம்

எதிர்க்கட்சித் தலைவர்களும், பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் முதலில் பேசுவதையும் அதற்கு பிரதமர் அளிக்கும் பதிலை அறிவதிலும் அதிக ஆர்வம் காட்டினர். இதனால், பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் பார்த்த பின்பே அவரை சந்திப்பது என எதிர்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த விருப்பத்துடனேயே முதல்வர் ஸ்டாலினும் இருந்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் டெல்லிபயணம், ஒவ்வொரு மாநிலத்திலும் புதிதாக பதவியேற்கும் முதல்வர்களின் வழக்கமான பயணம் போன்றதே ஆகும். இதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து சிறப்பு செய்தியாக்க திமுகவினர் பெரும் முயற்சி எடுத்திருந்தனர். ஸ்டாலினை டெல்லியில் வரவேற்க தமிழகத்திலிருந்து திமுக எம்.பி.க்களும் வந்திருந்தனர். கரோனா தொற்று காரணமாக திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவால் வரமுடியவில்லை எனத் தெரிகிறது.

முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு முன்பாக வெளியான பல புதிய தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டவை ஆகும். இதில் கூறியபடி அவர் மத்திய அமைச்சர் எவரையும் சந்திக்கவில்லை. எனினும், டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகள் அவரது தனித்துவத்தையும், தேசியத் தலைவர் என்பதை உணர்த்தும் வகையிலும் இருந்தன. இவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சோனியாவுடன் இன்று சந்திப்பு

தேசிய அளவில் முக்கிய எதிர்க்கட்சியாகவும் தங்களது கூட்டணிக் கட்சியாகவும் காங்கிரஸ் இருந்து வரும் நிலையில், அதன் தலைவர் சோனியா காந்தியையும் ஸ்டாலின் இன்று காலை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் ராகுல் காந்தியும் கலந்து கொள்கிறார். காங்கிரஸின் மற்றொரு முக்கியத் தலைவரான பிரியங்கா வதேராவை சந்திப்பது உறுதி செய்யப்படவில்லை.

இதில் முதல்வர் ஸ்டாலினைவரவேற்க தமிழக காங்கிரஸ்பொறுப்பாளர் குண்டு ராவும் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் பொதுவான கருத்துகளுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் பெறுவது குறித்த பேச்சும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று எம்.பி. பதவிகளில், பீட்டர் அல்போன்ஸ், கே.எஸ்.அழகிரி, குலாம் நபி ஆசாத் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.ஸ்டாலின் டெல்லி பயணம்மத்திய அரசு எதிர்க்கட்சிகள்முக்கியத்துவம் பெற்ற ஸ்டாலின் டெல்லி பயணம்Stalin delhi visitதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x