Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 03:13 AM

சர்ச்சைக்குரிய வீடியோ பகிர்ந்த விவகாரம்: ட்விட்டர் நிறுவனத்துக்கு நோட்டீஸ்: 6 பேர், 3 நிறுவனங்கள் மீது வழக்கு

சர்ச்சைக்குரிய வீடியோவை பலருக்கு பகிர்ந்தது தொடர்பாக காஜியாபாத் போலீஸார் ட்விட்டர்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த வீடியோவை பார்க்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்தது தொடர்பாக 6 பேர், 3 நிறுவனங்கள் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.

காஜியாபாத்தில் உள்ள லோனி பார்டர் காவல் நிலைய போலீஸார், ஏஎல்டி நியூஸ் என்ற பெயரில் செயல்படும் இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர், பத்திரிகையாளர்கள் ராணா அயூப், சாபா நக்வி மற்றும் சல்மான் நிஸாமி, மஸ்கூர் உஸ்மானி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷாமா முகமது ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படுவர் எனத் தெரிகிறது. ஜூன் 6-ம் தேதி மற்றொரு வழக்கு சமாஜ்வாதி கட்சி பிரமுகர்உம்மத் பெஹல்வான் இத்ரிஸ் மற்றும் அக்கட்சியின் மற்றொரு உறுப்பினர் சமத் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான கருத்துகளைப் பேசிய வீடியோவெளியிடப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கருத்துகளை சிறிதும் பரிசீலிக்காமல் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இந்த வீடியோ இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜூன் 5-ம் தேதி உ.பி.யின் புலந்த்ஷாகர் பகுதியைச் சேர்ந்த சமத் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதோடு அவரது தாடியையும் கத்தரித்தனர். தாக்குதல் நடத்திய கும்பல் தன்னை பாகிஸ்தான் உளவாளி என்று குறிப்பிட்டதாகவும், தன்னை ஜெய் ராம்என கூறுமாறு வலியுறுத்தியதாகவும் சமத் புகார் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x