Last Updated : 16 Jun, 2021 03:12 AM

 

Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

போக்குவரத்து நெரிசல் காரணமாக பெங்களூருவில் 21 வரை 144 தடை உத்தரவு அமல்

கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாத இறுதியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், கரோனா பரவல் குறையாததால் ஏப்ரல் 27-ம் தேதி தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பெங்களூருவில் ஓரளவுக்கு தொற்று குறைந்ததால் கடந்த 14-ம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

50 சதவீத ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதால் வெளியூர் சென்றிருந்தவர்கள் பெங்களூரு திரும்பினர். இதனால் கடந்த இரு தினங்களாக பெங்களூருவில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் கமல் பந்த் நேற்று கூறியதாவது:

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவது வருத்தம் அளிக்கிறது. பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக‌ அலைமோதுவதை பார்க்கும்போது மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை இரவு 12 மணி முதல் வரும் ஜூன் 21-ம் தேதி நள்ளிரவு வரை பெங்களூரு மாநகரம் முழுக்க 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x