Published : 23 Dec 2015 08:40 AM
Last Updated : 23 Dec 2015 08:40 AM

நாடாளுமன்ற துளிகள்: ஐஎஸ்ஸில் இந்தியர்கள்

நாடளுமன்றத்தில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில் விவரம்:

650 மத மோதல் வழக்குகள்

உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு:

கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை நாடு முழுவதும் 650 மத மோதல்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு 823 மத மோதல் சம்பவங்களும், 2014-ல் 644 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. சட்டம் ஒழுங்கு, வழக்கு பதிவு, விசாரணை உள்ளிட்டவை மாநில அரசின் பொறுப்பு.

ஐஎஸ்ஸில் இந்தியர்கள்

உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி:

தடை செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தலைமறைவான 2 பேர் ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேபாளத்தில் புகலிடம் தேடுவதாக வரும் தகவல்கள் குறித்து, உளவுத் துறை தகவல்கள் ஏதுமில்லை. இந்தியன் முஜாகிதீன் அமைப்பினர், நேபாளம், பாகிஸ்தான், வளைகுடா நாடுகளில் தலைமறைவாக உள்ளனர்.

புறங்கடை கோழிப்பண்ணை

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்:

வறுமைக் கோட்டுக் கீழ் வாழ்பவர்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு உதவும் என்பதால் வீட்டின் ஒருபகுதியில் கோழிப்பண்ணைகள் அமைக்கும் திட்டத்தில் அரசு கவனம் செலுத்துகிறது. பறவைகளின் இனப்பெருக்கத் திறனை அதிகரிப்பது, புறங்கடை கோழிப்பண்ணை திட்டத்துக்கு ஏற்றதாக இருக்கும்.

இதுசார்ந்த கருத்துரு, திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் மாநில அரசுகள் பரிந்துரை செய்யலாம். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.116.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடலோர பாதுகாப்பு

உள் துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு:

13 மாநிலங்களில் 204 கடலோர காவல் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 176 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறன்றன. 46 காவல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடலோர பாதுகாப்பு என்பது மிகுந்த சவால் நிறைந்தது. இதனை அரசு உணர்ந்தே இருக்கிறது. கடலோரா பாதுகாப்பை அதிகரிப்பது என்பது தொடர்ச்சியான நடைமுறை. மீனவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அளிக்கவும், அவர்களின் பெயர்களைப் பதிவு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x