Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

தனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்- கோவிஷீல்டு ரூ.780, கோவாக்சின் ரூ.1,410, ஸ்புட்னிக்-வி ரூ.1,145 ஆக இருக்கும் என மத்திய அரசு தகவல்

புதுடெல்லி

தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.780 ஆகவும், கோவாக்சின் தடுப்பூசியின் விலை ரூ.1,410 ஆகவும் நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை 1,145 ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை பரவத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கரோனா வைரஸுக்கான தடுப்பூசிதயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் கடந்த ஜனவரியில் பயன்பாட்டுக்கு வந்தன. அதன்பின், கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவத் தொடங்கியதால் தடுப்பூசிபோடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால், ஏற்பட்ட தடுப்பாட்டை போக்க ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது நாடுமுழுவதும் இந்த 3 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

கடந்த 7-ம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படும். மொத்தம் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்தியஅரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். தனியார் மருத்துவமனைகள் 25 சதவீத தடுப்பூசியை கொள்முதல் செய்து மக்களுக்கு செலுத்தலாம்’’ என அறிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியின் வகையைப் பொறுத்து குறிப்பிட்ட விலையில் மக்களுக்கு செலுத்தப்படுகின்றன.

பல தனியார் மருத்துவமனைகள் மிக அதிக விலைக்கு தடுப்பூசிகளை செலுத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், தனியார்மருத்துவமனைகளில் மக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளுக்கான விலையை நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.780 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவாக்சின் தடுப்பூசி ரூ.1,410 ஆகவும், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ரூ.1,145 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயத்தில் வரி மற்றும் சேவைக் கட்டணம் 150 ரூபாயும் அடங்கும். சேவை கட்டணமாக ரூ.150-க்கு மேல் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு கூடுதலாக வசூலிக்கும் மருத்துவமனைகளை மாநில அரசுகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2-டிஜி கரோனா மருந்து பாக்கெட் விலை ரூ.990 ஆக நிர்ணயம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) கண்டுபிடித்துள்ள 2-டிஜி கரோனா மருந்து பாக்கெட் விலை ரூ.990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிஆர்டிஓ அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியார் மெடிசின் அண்ட் அலைடு சயின்சஸ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த உதவும் 2-டிஜி என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. தூள் வடிவிலான இந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்ய ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபக் சப்ரா நேற்று முன்தினம் கூறும்போது, “கரோனா நோயாளிகளை குணப்படுத்தும் 2-டிஜி மருந்தின் ஒரு பாக்கெட் விலை ரூ.990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியை அதிகரித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், “நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் வகையில் 2-டிஜி மருந்தின் விலை நிர்ணயம் செய்யப்படும்” என கூறப்பட்டிருந்தது.

ஆனால், அந்த மருந்துக்கு இப்போதுஅதிக விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x