Published : 13 Jun 2014 05:40 PM
Last Updated : 13 Jun 2014 05:40 PM

ரத்த தானம்: தேவை மேலும் 2 சதவீத இந்தியர்களின் பங்களிப்பு!

100 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 30 லட்சம் யூனிட்களுக்கான ரத்தம் பற்றாக்குறையாக உள்ளது.

உலக ரத்த தான தினம் நாளை (ஜூன் 14) அனுசரிக்கப்படும் நிலையில் ரத்த தானம் அளிக்க மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் தேவைப்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

2012 ஆம் ஆண்டு உலகச் சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையின்படி 90 லட்சம் யூனிட் ரத்தமே ஆண்டுக்கு சேகரிக்கப்படுகிறது. ஆனால் தேவையோ 1 கோடியே 20 லட்சம் யூனிட்கள் என்று கூறியிருந்தது.

தானம் செய்யப்பட்ட ரத்தத்தை 35 முதல் 42 நாட்கள் வரையே வைத்திருக்க முடியும். ஆகவே புதிய ரத்தத்திற்கானத் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு மேலும் 2% இந்தியர்கள் ரத்த தானம் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது.

18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமானவர்களே ரத்த தானம் செய்ய முடியும். இவர்கள் ரத்த தானம் செய்ய அதிகம் முன் வரவேண்டும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

நாளை உலக ரத்த தான தினம் அனுசரிக்கப்படுவதால், "தாய்மார்களைக் காப்பாற்ற பாதுகாப்பான ரத்தம்" என்ற முழக்கம் வெளிவரவுள்ளது.

மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, குஜராத், சண்டிகர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ரத்த தானத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மற்ற மாநிலங்களின் பங்களிப்பு அதிகரித்தால் 2% பற்றாக்குறையை எளிதில் அகற்ற முடியும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

மேலும், உயர் கொலஸ்ட்ரால், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது என்பது போன்ற வதந்திகள் நிலவி வருகின்றன. ஆகவே விழிப்புணர்வு மூலம் ரத்த தானத்திற்கு எதிரான மனோநிலையை மாற்றினால் பற்றாக்குறை எளிதில் அகலும் என்று கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x