Last Updated : 24 Dec, 2015 08:26 AM

 

Published : 24 Dec 2015 08:26 AM
Last Updated : 24 Dec 2015 08:26 AM

மத்திய, மாநில அரசுகள் இணைந்து புற்றுநோய் சிகிச்சை கட்டணத்தை மேலும் குறைக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள்

மத்திய மாநில அரசுகள் இணைந்து புற்றுநோய் சிகிச்சைக்கான கட்டணத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2 நாட்கள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடகாவுக்கு வந்தார். பெங்களூரு ரெசிடென்சி சாலையில் உள்ள பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளியின் 150-வது ஆண்டு விழாவில் நேற்று பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து கித்வாய் புற்றுநோய் மருத்துவமனை நிறுவனர் தின விழாவில் கலந்துகொண்டு, மாநில புற்றுநோய் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக அளுநர் வாஜுபாய் வாலா, முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

உலகம் முழுவதும் எளிதில் குணப்படுத்த முடியாத அளவுக்கு புற்றுநோய் மிகப்பெரும் சவாலாக உள்ளது. நாட்டில் புற்றுநோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ள‌ன. கிராமங்களில் வாழும் மக்கள், ஏழை எளியோர், நடுத்தர வர்க்கத்தினருக்கு புற்றுநோய் சிகிச்சை எட்டா கனியாக இருக்கிறது. எளிதில் குணப்படுத்த முடியாத நோய் என்பதால் புற்றுநோய் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் பொருட்செலவை கண்டு நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும் அச்சப்படுகின்றனர். இதனாலே உரிய சிகிச்சை பெறாமல் பெரும்பாலானோர் இறந்து போகின்றனர். மத்திய மாநில அரசுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த நிலையை மாற்ற முயற்சித்து வருகின்றனர். இருப்பினும் சிகிச்சைக்கான கட்டணத்தை மேலும் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு புற்றுநோயை எளிதில் குணப்படுத்தும் மருந்துகளை கண்டறிய வேண்டும். மேலும் இந்த நோய் வராமல் தடுக்கும் முறையைக் கண்டறிந்து, நாட்டு மக்களுக்கு அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புற்றுநோய் இல்லாத உலகை உருவாக்க, நோய் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை மேலாண்மையை மருத்துவமனைகள் கையாள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x