Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

கரோனா நோயாளிகளுக்கு உதவ வெளிநாடுகள் அனுப்பி வைத்த ஆக்சிஜன் கருவிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை: மத்திய சுகாதார துறை அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ, வெளிநாடுகள் அனுப்பிய ஆக்சிஜன் கருவிகள் எதுவும் சுங்கத் துறையிடம் நிலுவையில் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அதை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கிடையில் டெல்லி உட்பட சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ மனைகளில் படுக்கைகள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவுக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் ஆக்சிஜன் உற்பத்தி கருவிகள், மூலக் கூறுகளை அனுப்பி வருகின்றன.

அப்படி வெளிநாடுகள் அனுப்பி வைத்த ஆக்சிஜன் கருவிகள் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சுங்கத் துறையினரின் அனுமதிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் பரவின. இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலும், ‘‘வெளிநாடுகள் அனுப்பிய 3,000 ஆக்சிஜன் கருவிகள் சுங்கத் துறை கிடங்கில் அனுமதிக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்படி எந்த ஆக்சிஜன் கருவியும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று மத்திய அரசு வழக்கறிஞர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கரோனா நோயாளிகளுக்கு உதவ சீனா 1,000, அயர்லாந்து 700, பிரிட்டன் 669, மொரீசியஸ் 200, உஸ்பெகிஸ்தான் 151, தைவான் 150, ரோமானியா 80, தாய்லாந்து 30, ரஷ்யா 20 என ஆக்சிஜன் கருவிகளை அனுப்பி வைத்தன. அவை சம்பந்தப்பட்ட விமான நிலையங்களில் இருந்து சுங்கத் துறையினர் உடனுக்குடன் அனுமதி அளித்து வெளியில் அனுப்பினர். அவை பல்வேறு இடங்களுக்கு சிகிச்சைக்காக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து நேரடி வரி மற்றும் சுங்கத் துறையும் தெளிவாக விளக்கி விட்டது. சுங்கத்துறையிடம் ஆக்சிஜன் கருவிகள் தேங்கி கிடப்பதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. இதுவரை 3,000 ஆக்சிஜன் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது சுங்கத் துறையின் கிடங்குகளில் எந்த வெளிநாட்டு ஆக்சிஜன் கருவிகள் முடங்கிக் கிடக்கவில்லை.

இவ்வாறு சுகாதார துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17.15 கோடி தடுப்பூசி

மத்திய சுகாதாரத் துறை கூறுகையில், ‘‘மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 லட்சம் டோஸ்களுக்கு மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி இதுவரை 17.15 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x