Published : 19 Dec 2015 09:13 AM
Last Updated : 19 Dec 2015 09:13 AM

சாலை விபத்தில் சிக்கிய இன்ஜினீயருக்கு ரூ.2 கோடி நிவாரணம்: மோட்டார் விபத்து தீர்ப்பாணையம் அதிரடி தீர்ப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய ஐஐடி இன்ஜினியருக்கு ரூ. 2 கோடி நிவாரண உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பை ஐஐடியில் படித்து இன்ஜினியர் பட்டம் பெற்றவர் அன்ஷும் அகர்வால். ஹரியாணா மாநிலத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி ஆண்டுக்கு ரூ.46.5 லட்சம் சம்பளமாக பெற்று வந்தார். கடந்த 2012, ஜூன் மாதம் சைபர் பார்க்கில் உள்ள அலுவலகத்தில் இருந்து குர்கானில் உள்ள தன் வீட்டுக்கு அலுவலக காரில் அகர்வால் வந்து கொண்டிருந்தார். டெல்லியின் கைலாஷ் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த வைபவ் கண்டேல்வால் என்பவருக்கு சொந்தமான காரை, அவரது நண்பர் வருண் என்பவர் ஓட்டி வந்தார். கன்ஹாய் கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலையின் ஒரு திருப்பத்தில் அகர்வாலின் கார் வந்தபோது எதிரே வேகமாக வந்த கண்டேல்வாலின் கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் ஐஐடி இன்ஜீனியர் அகர்வாலுக்கு முதுகு தண்டு உடைந்தது. சுமார் நான்கு மாதங்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

எனினும் அவரால் முன்பை போல் இயல்பாக நடமாடவோ பணியாற்றவோ முடியவில்லை. பேச்சு திறனும் குறைந்து திக்குவாயும் ஏற்பட்டதால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

இந்நிலையில், வேகமாக கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கண்டேல்வால் மீது அகர்வால் சார்பில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அகர்வால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுசிக், ‘‘இந்த விபத்தால் அகர்வாலும் அவரது குடும்பத்தினரும் மன ரீதியாக பாதிப்படைந்தனர். தவிர சிகிச்சைக்காக ரூ. 50 லட்சம் செலவழித்தும் முன்பு இருந்த ஆரோக்கியத்தை அவரால் திரும்ப பெற முடியவில்லை. எனவே உரிய நிவாரணத் தொகையை வழங்கி தரும்படி தீர்ப்பாணையம் உத்தரவிட வேண்டும்’’ என வாதாடினார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஹமாம் சிங் தாக்கூர் கடந்த 15-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில் ‘படுகாயமடைந்த அகர்வாலுக்கு ரூ.1.78 கோடி இழப்பீடாக அளிக்க வேண்டும். மேலும் வழக்கு தொடுத்த நாள் முதல் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து அந்த தொகையை வழங்க வேண்டும். வட்டியுடன் இழப்பீடு தொகை ரூ.2.06 கோடி வருவதால், இதனை காரின் உரிமையாளர், அதை ஓட்டி வந்த ஓட்டுநர், காப்பீட்டு நிறுவனம் ஆகியோர் இணைந்து வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x