Last Updated : 08 Dec, 2015 09:33 AM

 

Published : 08 Dec 2015 09:33 AM
Last Updated : 08 Dec 2015 09:33 AM

அமைச்சர் வி.கே.சிங்கை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் போராட்டம்

தலித் குழந்தைகள் உயிருடன் எரிக்கப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் வி.கே.சிங்கை பதவியில் இருந்து நீக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தலைமையில் நேற்று போராட்டம் நடந்தது.

ஹரியாணா மாநிலத்தில் தலித் குடும்பத்தை சேர்ந்த இரு குழந்தைகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், ‘‘நாய்கள் மீது கல்லெறிந்தால் கூட, மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டுமோ’’ என்று கருத்து தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சிகள் வி.கே.சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இதனால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

இதே பிரச்சினையை வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தலைமையில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆஸாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, தீபேந்தர் ஹுடா உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது தலித் சமூகத்தினரை இழிவாக பேசிய வி.கே.சிங்கை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, ‘‘ஒரு குறிப்பிட்ட சமூத்தினரை மத்திய அமைச்சர் இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது’’ என்றார். மேலும், இப்பிரச்சினையை நாடாளுமன்றத்தில் வலுவாக எழுப்பப் போவதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறும்போது, ‘‘தலித் சமூகத்தினரை இழிவுப்படுத்தும் வகையில் வி.கே.சிங் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் தான் ஒன்றுமில்லாத விவகாரத்தை பெரிதுபடுத்த நினைக்கின்றன. ராகுல் இந்த விவகாரத்துக்கு அரசியல் சாயம் பூச நினைக்கிறார். அதற்காகவே திடீரென போராட்டம் நடத்தியுள்ளார். வி.கே.சிங் தெரிவிக்காத கருத்தை, தெரிவித்ததாக கூறி பிரச்சினை எழுப்புவது மிகவும் துரதிருஷ்டவசமானது’’ என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x