Published : 22 Apr 2021 03:13 AM
Last Updated : 22 Apr 2021 03:13 AM

கரோனா நோயாளிகளுக்கு உதவ டாடா குழுமம் 24 கன்டெய்னர் ஆக்சிஜன் இறக்குமதி: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

கரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக வெளிநாட்டிலிருந்து 24 கிரையோஜெனிக் கன்டெய்னர்களில் ஆக்சிஜனை இறக்குமதிசெய்ய டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த ஆக்சிஜன் கன்டெய்னர்களை விமானம் மூலம் விரைவாகக் கொண்டு வர இந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் என்பது இரண்டு அடுக்குகளைக் கொண்ட, உள்புறம் காற்றுமுழுவதுமாக நீக்கப்பட்ட கன்டெய்னராகும். இவற்றில் திரவ நிலையிலான ஆக்சிஜன் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படும். இது மைனஸ் 90 டிகிரி உறை குளிர் நிலையில் வைக்கப்படும். ஒரு கன்டெய்னரில் அதிகபட்சம் 61,620 லிட்டர் வரையான ஆக்சிஜனை கொண்டு வர முடியும்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இதில்தலைநகர் டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெரும்பாலும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதனால் இம்முறை ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரமதர், இம்முறை கரோனா வைரஸ் சூறாவளியைப் போலதாக்குகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜேஎஸ்பிஎல் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து சப்ளை செய்வதாக அறிவித்திருந்தன. இந்நிலையில் உடனடி தீர்வாக வெளிநாட்டிலிருந்து ஆக்சிஜனை டாடா குழுமம் இறக்குமதி செய்து பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக டாடா குழுமம் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், தற்போதைய இக்கட்டான சூழலில் இறக்குமதி ஆக்சிஜன் நிலையை சீராக்க உதவும் எனசுட்டிக்காட்டியுள்ளது. இது மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே டாடா ஸ்டீல்நிறுவனத்திலிருந்து நாளொன்றுக்கு 200 டன் முதல் 300 டன் வரையான திரவ ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

டாடா குழுமம் மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு தாராளமாக உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. டாடா அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத் திட்டங்களை இக்குழுமம் மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே தலைநகர் டெல்லிக்குத் தேவைப்படும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வருவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு கரோனா வைரஸ்பரவல் அதிகரித்த சூழலில் டாடா அறக்கட்டளை ரூ. 1,500 கோடியை பிரதமர் நல நிதிக்கு வழங்கியது.

இது தவிர வென்டிலேட்டர்கள், பிபிஇ கருவிகள், பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றை தொடர்ந்து கொள்முதல் செய்து விநியோகித்து வருகிறது. கேரள மாநிலத்தில் 6 வாரங்களில் மருத்துவமனையையும் கட்டித் தந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x