Last Updated : 30 Dec, 2015 08:58 AM

 

Published : 30 Dec 2015 08:58 AM
Last Updated : 30 Dec 2015 08:58 AM

முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் சோதனை: சுரங்க முறைகேடு வழக்கில் கர்நாடக லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடவடிக்கை

முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் கர்நாடக லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி கடந்த பாஜக ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தார். இவர் ஓபலாபுரம் சுரங்க நிறுவனம், அனந்த்பூர் சுரங்க நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு சுரங்க ஏற்றுமதி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு ஜனார்த்தன ரெட்டி மீது சட்ட விரோதமாக சுரங்க முறைகேடு மற்றும் கனிம ஏற்றுமதி தொடர்பான குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து சிபிஐ மற்றும் லோக் ஆயுக்தா அதிகாரிகள் 7 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்குகளில் அவரை கைது செய்து, 2 ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். இதனிடையே ஜனார்த்தன ரெட்டி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனார்.

இந்நிலையில் கர்நாடக லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமாக பெங்களூரு மற்றும் பெல்லாரியில் உள்ள வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். லோக் ஆயுக்தா ஊழல் தடுப்புத்துறை கண்காணிப்பாளர் சம்பத்குமார் தலைமையில் 42 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பெங்களூரு பாரிஜாதா வீட்டில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஜனார்த்தன ரெட்டி முன்னிலையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது சுரங்க முறைகேடு, கனிம ஏற்றுமதி தொடர்பாக பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதே போல பெல்லாரியில் நடந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களும், முக்கிய குறிப்புகள் அடங்கிய குறுந்தகடுகள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக பெல்லாரி தொகுதியின் பாஜக‌ எம்பியும், ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீராமலு கூறும்போது, “சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு திட்டமிட்டு, பழிவாங்கும் நோக்கத்துடன் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த சோதனைகளை சட்டப்படி எதிர்கொண்டு, ஜனார்த்தன ரெட்டி அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை ஆவார்''என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x