Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

கரோனா நோயாளி பக்கத்தில் வந்தால் எச்சரிக்கும் கருவி: பிஹார் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கியது மத்திய அரசு

பிஹாரை சேர்ந்த பள்ளி மாணவர்கள், கரோனா எச்சரிக்கை கருவியை கண்டுபிடித்து புதிய சாதனைபடைத்துள்ளனர். அவர்களது கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.

பிஹார் தலைநகர் பாட்னாவில் செயல்படும் பால பவன் கில்காரியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் அர்பித் குமார். இவரது தம்பி அபிஜித் குமார். இவர் 10-ம்வகுப்பு படிக்கிறார். சிறுவயது முதலே இருவரும் அறிவியல் ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தரமான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர கண்டுபிடிப்புக்காக கடந்தஆண்டு இருவருக்கும் பிரதீபா புரஸ்கார் விருதினை குடியரசுத் தலைவர் வழங்கினார். தற்போதுஇருவரும் இணைந்து கரோனா எச்சரிக்கை கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டு கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் செய்யப்பட்டபோது, வைரஸ்பரவலை தடுப்பது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டோம். சுமார் 4 மாத ஆராய்ச்சிக்குப் பிறகு கரோனா எச்சரிக்கை கருவியை வெற்றிகரமாக வடிவமைத்தோம்.

எங்களது கருவி சட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் சிறிய பதக்கம் (பேட்ஜ்) வடிவில் இருக்கும். உடல் வெப்பநிலை அதிகமுள்ள நபர் ஒரு மீட்டர் தொலைவில் வரும்போது எங்களது கருவி ‘பீப்' ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும். அந்த நபர் மிக அருகில் வரும்போது கருவி தொடர்ச்சியாக அதிர்வுகளை ஏற்படுத்தி எச்சரிக்கை செய்யும்.

இதன்மூலம் உடல் வெப்பம் அதிகம் உள்ள நபர்களிடம் இருந்துஎளிதாக விலகி செல்ல முடியும். எங்களது கருவிக்கு காப்புரிமை கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசிடம் விண்ணப்பித்தோம். பல்வேறு கட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 26-ம் தேதி எங்கள் கருவிக்கு காப்புரிமை வழங்கப்பட்டது.

புதிய கருவியை வணிகரீதியாக தயாரிக்க பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அர்பித் குமார், அபிஜித் குமாரின் பயிற்சியாளர் மஞ்சு குமாரி கூறும்போது, “சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக பிஹார்அரசு சார்பில் பால பவன் கில்காரி நடத்தப்படுகிறது. இங்கு பயிலும் அர்பித் குமார், அபிஜித் குமார் ஆகிய இருவரும் சிறுவயதிலேயே அறிவியல் ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டினர். அதற்கேற்ப அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கினோம்.

ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் ஆய்வுக் கூடங்களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளித்தோம். இதன்காரணமாக இன்று இருவரும் இளம் வயதிலேயே அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக உருவெடுத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x