Last Updated : 04 Nov, 2015 03:46 PM

 

Published : 04 Nov 2015 03:46 PM
Last Updated : 04 Nov 2015 03:46 PM

நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதா கோழி இறைச்சி?

கோழி வளர்ப்புப் பண்ணைகளில் கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்க அளவுக்கு அதிகமாக முறையற்ற விதங்களில் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுப்பது பற்றி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

புதுடெல்லியில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் குழுவினர் இந்த எச்சரிக்கை விடுத்தனர். அதாவது அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கோழிகளுக்கு நோய் தடுப்பிற்காக கொடுக்கப்படுவதால், கோழி இறைச்சி எடுத்துக் கொள்பவர்களுக்கு இருக்கும் இயலான நோய் எதிர்ப்புச் சக்தி குறைய சாத்தியமிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கங்காராம் மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த மருத்துவர் டாக்டர் சந்த் வட்டல் குறிப்பிடும் போது, “விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அறிவுக்கு விரோதமான முறைகளில், அளவுகளில் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் அளிக்கப்படுவது நம்மை பெரிய பிரச்சினையில் தள்ளிவிடும். குறிப்பாக மனித ஆரோக்கியம் பெரிய இடர்பாடுகளை இதனால் சந்தித்து வருகிறது.

மேலும், நாம் ஏற்கெனவே கிடைத்து வரும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள், மாத்திரைகள் விலை அதிகமாக இருக்கும் எனவே முறையற்ற விதங்களில், தேவையற்ற, அறிவுக்கு புறம்பான விதங்களில் அதனை கோழிகளுக்கும், மனிதர்களுக்கும் பயன்படுத்துவது கூடாது” என்றார்.

இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட பல்வேறு மருத்துவத் துறை நிபுணர்கள், இந்தியாவில் பல விதங்களிலும் ஆன்ட்டி பயாடிக் பயன்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது என்று எச்சரித்தனர்.

விலங்கு மருந்தியல் துறை பேராசிரியர் என்.கே.மகாஜன் குறிப்பிடும்போது, "விலங்குப் பண்ணை வைத்திருப்பவர்கள் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை விவேகமாகப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் இதனால் அவர்களுக்கும் பிரச்சினை, மற்றவர்களுக்கும் பிரச்சினையே.

அவர்கள் எப்போதும் கூறுவதென்னவெனில் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளினால் பயன் பெரிதாக இல்லை என்பதே, இதனால் அதிகமாக அதனை பறவைகளுக்கு கொடுக்கின்றனர். உயிர்-பாதுகாப்பு முறைகளில் அவர்களுக்கு போதிய பயிற்சி இல்லை. மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் மூலம் விலங்கு, மற்றும் பறவைகள் உணவில் ஆன்ட்டி பயாடிக் கலப்பை கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.

அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் கொடுக்கப்படுவதன் விளைவு உணவுச்சங்கிலியை பாதித்து, புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த வித ஆன்ட்டி பயாடிக் மருந்தும் வேலை செய்யாது போய்விடும் அபாயம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வருகிறது. காரணம், பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை எளிதில் தடுத்தாட்கொள்ளத் தொடங்கி விட்டன. இதனால் பிற்பாடு எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்துவது கடினமாாகிவிடும் என்கின்றனர் இந்த விஞ்ஞானிகள். அதாவது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான சாத்தியம் அதிகம் என்கின்றனர்.

ஏற்கெனவே நாட்டில் தயாரிக்கப்படும் வணிக முத்திரை பெற்ற தேனில் ஆன்ட்டி பயாடிக் படிவுகள் அளவுக்கதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x