Published : 05 Apr 2021 03:14 AM
Last Updated : 05 Apr 2021 03:14 AM

இந்தியாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிரம்; 7.59 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி விநியோகம்: மத்திய சுகாதாரத் துறை தகவல்

இந்தியாவில் இதுவரை 7.59 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்தஓராண்டு காலமாக கரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அச்சுறுத்தலை உண்டாக்கி வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கைகள் ஆகியவை எடுக்கப்பட்டு வந்தன. கடந்த பிப்ரவரியில் இருந்து கரோனாவுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இதுவரை 7,59,79,651 டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில் 6,57,39,470 டோஸ் முதல் கட்ட தடுப்பூசியும், 1,02,40,181 டோஸ் இரண்டாம் கட்ட தடுப்பூசியும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் மொத்தமாக விநியோகம் செய்யப்பட்டுள்ள தடுப்பூசியில் மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்களுக்கு 89,82,974 முதல் டோஸும், 53,19,641 இரண்டாம் டோஸும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மக்கள் சேவையில் உள்ள பணியாளர்களுக்கு 96,86,477முதல் டோஸும், 40,97,510 இரண்டாம் டோஸும் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4,70,70,019 முதல் டோஸும், 8,23,030 இரண்டாம் டோஸும் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவிலான புள்ளிவிவரங்கள்படி பார்க்கையில் 8 மாநிலங்களில் 60.19 சதவீததடுப்பூசி டோஸ்கள் விநியோகிக்கப் பட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்ட்ர மாநிலத்தில் 9.68 சதவீத டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதுவரை உலக அளவில் 13 கோடி பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 10.5 பேர் கோடி தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இறப்பு மட்டுமே 28 லட்சத்துக்கும் மேல். இந்தியாவில் 1.25 கோடி பேர் தொற்றுக்கு ஆளாகினர். 1.6 லட்சம் பேர் இறந்துள்ளனர். தொற்றில் முன்னிலை மாநிலங்களாக மகாராஷ்ட்ரா, கர்நாடகா, சத்தீஸ்கர், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்கள் உள்ளன. இவை மொத்த நாட்டின் தொற்று கணக்கில் 76.41 சதவீதம் பங்கு வகிக்கின்றன. மகாராஷ்ட்ரா மட்டுமே 58.19 சதவீத தொற்றுக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பரவி வருகிறது. மீண்டும் ஒரு நாள் தொற்று ஒரு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் தொற்றிலிருந்து மீண்டுவரும் சதவீதம் 93.14 சதவீதமாக இருப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x