Last Updated : 25 Nov, 2015 09:44 AM

 

Published : 25 Nov 2015 09:44 AM
Last Updated : 25 Nov 2015 09:44 AM

கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியின் குறுக்கே யுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 114.10 அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள‌து.

இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டனா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 124.80 அடி உயரம் (49 டிஎம்சி கொள்ளளவு) கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 114.10 அடியை எட்டியது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,508 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு இதே நீர்வரத்து தொடர்ந்தால், அணை முழுக் கொள்ளளவை எட்டும் என காவிரி நீர் நிர்வாக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழாண்டில் முதல் முறையாக‌ கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இந்த அளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறும்போது, “கடந்த 1924-ம் ஆண்டு கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் இதுவரை 3.318 டிஎம்சி வண்டல் மண் சேர்ந்துள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவில் 0.087 சதவீத மண் சேர்ந்துள்ளதால், அணைக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது. இந்த அளவு மத்திய நீர் ஆணையம் விதித்துள்ள வரம்புக்கு உட்பட்டு இருப்பதால், இப்போது தூர்வாரும் திட்டமில்லை” என்றார்.

மண்டியா மாவட்ட விவசா யிகளும், அரசியல் வாதிகளும் கிருஷ்ணராஜ சாகர் அணையை தூர்வார வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x