Published : 11 Nov 2015 04:11 PM
Last Updated : 11 Nov 2015 04:11 PM

பிஹார் தோல்வி: கருத்து வெளியிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மீது நடவடிக்கை கோரும் கட்கரி

பிஹார் தேர்தல் தோல்விகளுக்கான உண்மையான காரணங்களை ஆராய வேண்டும் என்று அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் கூறியதையடுத்து ‘பொறுப்பற்ற அறிக்கைகள்’ விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

பிஹார் தேர்தல் தோல்விக்கு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டிய தேவையில்லை என்று கூறும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இது பற்றி பொறுப்பற்ற முறையில் அறிக்கை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

"பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பிஹார் தோல்விக்கு பொறுப்பாக முடியாது. இதற்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

மேலும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இது குறித்து அறிக்கை விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு நான் அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளேன், என்றார்.

அத்வானியுடன் பேசுவோம்:

பிஹார் தேர்தல் தோல்விக்கான காரணங்களை முழுதாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி உட்பட முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் சாந்த குமார் ஆகியோர் கோரியிருப்பது பற்றி நிதின் கட்கரியிடம் கேட்ட போது, “இந்த விவகாரம் குறித்து அத்வானியிடம் நாங்கள் பேசுவோம்” என்றார்.

மகா கூட்டணி பிஹாரில் வலுவடைந்துள்ளது என்று கூறிய நிதின் கட்கரி, "பிஹாரில் நாமும் வலுப்பெறுவதற்கான வழிவகைகளைக் கண்டடைய வேண்டும்" என்றார்.

அத்வானி, ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, சாந்தகுமார் உள்ளிட்ட பாஜக-வின் மார்கதர்ஷக் மண்டல் தலைவர்கள் தங்கள் அறிக்கையில், பிஹார் தேர்தல் தோல்வி குறித்து கூறும்போது, "டெல்லி தேர்தல் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பிஹார் தோல்விக்கு அனைவரும் காரணம் என்று கூறுவது ஒருவரும் அதற்கு பொறுப்பில்லை என்ற பொருளையே கொடுக்கிறது.

தோல்விக்குப் பொறுப்பானவர்கள், தோல்விக்கான காரணங்களை மறு ஆய்வு செய்ய முடியாது. எனவே தோல்விக்கான உண்மையான காரணங்களை முற்று முழுதாக அலசி ஆராய்வதோடு, கட்சியின் கருத்தொருமித்தல் பண்பு சிதைக்கப்பட்டு கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்காக ஆனது எப்படி என்பது பற்றியும் தீவிர மறு ஆய்வு தேவை" என்று கூறியிருப்பது பாஜக வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நிதின் கட்கரி, அமித் ஷாவையும் பிரதமர் மோடியையும் ஆதரித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x