Published : 04 Apr 2021 12:56 PM
Last Updated : 04 Apr 2021 12:56 PM

மோசடிகளைத் தடுக்க சுகாதார, முன்களப் பணியாளர்கள் கரோனா தடுப்பூசிக்குப் பதிவு செய்வது நிறுத்தம்: மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி போடுவதற்குப் பதிவு செய்வதை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை நேற்று உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு தடுப்பூசி மையங்களில் முறைகேடான வழியில், தகுதியற்ற நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, இந்த உத்தரவை நேற்று இரவு மத்திய அரசு பிறப்பித்தது.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதை வேகப்படுத்துமாறும், அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஷ் பூஷன் நேற்று இரவு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

''கோவின் இணையதளத்தின் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களைப் பதிவு செய்து, கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அதேநேரம் ஏற்கெனவே பதிவு செய்திருக்கும் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் எடுக்க வேண்டும்.

சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்குத் தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பல முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையே பல்வேறு தரப்பிலும் கிடைத்த தகவலின்படி, கரோனா தடுப்பூசி போடும் மையங்களில் தகுதியற்ற பயனாளிகள் சுகாதாரப் பணியாளர்களாகவும், முன்களப் பணியாளர்களாகவும் பதிவு செய்து, தடுப்பூசி போடுவதாகத் தகவல் வந்தது. இது கரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு எதிரானது.

கடந்த சில நாட்களாக, சுகாதாரப் பணியாளர்கள் பெயர் மற்றும் புள்ளிவிவரங்களில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசுகளின் பிரதிநிதிகள், மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனையின் முடிவில், சுகாதாரப் பிரிவு பணியாளர்கள், மற்றும் முன்களப் பணியாளர்கள் பிரிவுகளில் புதிதாகப் பதிவு செய்வது உடனடியாக நிறுத்தப்படுகிறது.
அதேசமயம் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கோவின் போர்டலில் தொடர்ந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x