Published : 03 Apr 2021 11:54 AM
Last Updated : 03 Apr 2021 11:54 AM

கரோனாவை கட்டுப்படுத்த செயல் திட்டம்:  மத்திய அரசு அறிவிப்பு

நாடுமுழுவதும் கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்த மத்திய சுகாதார அமைச்சகம் கரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.

கோவிட் நிலைமை குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், காவல் துறை தலைமை இயக்குநர்கள் மற்றும் சுகாதார செயலாளர்களுடன் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வு கூட்டத்திற்கு மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா தலைமை தாங்கினார்.

கடந்த இரு வாரங்களில் தினசரி கோவிட் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகளவில் பதிவாகி வரும் 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கோவிட் மேலாண்மை மற்றும் எதிர்வினை யுக்தியை ஆய்வு செய்வதற்கான இக்கூட்டத்தில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், காவல் துறை தலைமை இயக்குநர்கள், சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்), மத்திய உள்துறை செயலாளர், மத்திய சுகாதார செயலாளர், மத்திய செயலாளர் (தகவல் & ஒலிபரப்பு), ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தற்போதைய நிலைமை பற்றி குறிப்பிட்ட அமைச்சரவை செயலாளர், 85,000 தினசரி பாதிப்புகள் என்ற எண்ணிக்கையை நாடு தற்போது தொட்டுள்ளதாகவும், இது மிகவும் முக்கியமான காலகட்டம் என்றும் கூறினார்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தொற்றுகளின் நிலவரம் குறித்து மத்திய சுகாதார செயலாளர் விரிவாக பேசிய நிலையில், மக்களிடையே முறையான கோவிட் நடத்தை விதிமுறையை ஏற்படுத்த செயல்திறன் மிக்க தகவல் தொடர்பு குறித்து மத்திய செயலாளர் (தகவல் & ஒலிபரப்பு) எடுத்துரைத்தார்.

கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கீழ்கண்டவற்றை பின்பற்றுமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன

* தொற்று உறுதியாதல் விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் பரிசோதனைகளை அதிகப்படுத்துதல்.

* மொத்த பரிசோதனைகளில் 70 சதவீதம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளாக இருக்கும் வகையில் கவனம் செலுத்துதல்.

* பரிசோதனை நிலையங்களுடன் தொடர்ந்து ஆய்வு செய்து பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் காலத்தை குறைத்தல்.

* மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில் துரித ஆன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல்.

* அறிகுறிகள் இருந்தும் துரித ஆன்டிஜென் பரிசோதனைகளில் தொற்று இல்லை என்று வரும் பட்சத்தில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை கட்டாயமாக செய்தல்.

* பாதிக்கப்பட்டவர்களின் முறையான தனிமைப்படுத்துதலை உறுதி செய்தல்.

* ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபருக்கும் 25 முதல் 30 தொடர்புகள் வரை கண்டறிதல்.

* கட்டுப்பாட்டு பகுதிகள், குறு கட்டுப்பாட்டு பகுதிகளை அமைத்தல்.

இறப்புகளை கட்டுப்படுத்துவதற்காக படுக்கைகள், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள், சுவாசக்கருவிகள், அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்துமாறும், மக்கள் விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும், அவ்வாறு செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்குமாறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

தடுப்பு மருந்து வழங்கலை சிறப்பான முறையில் செயல்படுத்துமாறும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x