Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

வேகமெடுக்கும் சபரிமலை விவகாரம்; இந்து வாக்குகளைப் பெறுவதில் சிக்கல்: கடவுளின் தேசத்தில் நெருக்கடியை சந்திக்கும் ஆளும் மார்க்சிஸ்ட்

கேரளாவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சபரிமலை விவகாரத்தையே பிரதானமாக முன்னெடுக்கின்றன. இதனை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் வரும் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. கேரளாவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. கேரளாவைப் பொறுத்த வரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் என்பது கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இதனால் நிச்சயமாக ஆட்சி மாற்றம் இருக்கும் என நம்பிக்கையுடன் இருந்தது காங்கிரஸ் கட்சி.

இந்நிலையில்தான் கேரளாவில் தொடர்ந்து வெளியான கருத்துக் கணிப்புகள் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறியது. இதனிடையே பி.சி.சாக்கோ, மாநில மகளிரணி தலைவி லத்திகா சுபாஸ் உட்பட சீனியர்
நிர்வாகிகளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சிக்குகடும் நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் சபரிமலை விவகாரத்தை தேர்தல் அஸ்திரமாக காங்கிரஸ், பாஜக கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

காங்கிரஸ், பாஜக கட்சிகள் சபரிமலையின் புனிதத்தைக் காக்கும் வகையில் தனி சட்டம் இயற்றப்படும் என தங்கள் தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்துள்ளன. அதை முன்னிலைப்படுத்தியே தேர்தலையும் அணுகுகின்றன. இது மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் தன்னை முற்போக்கு முகமாகவேமுன்னிறுத்துவதால் சபரிமலை விவகாரத்தில் அதனால் எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. ஏற்கெனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் சபரிமலை விவகாரத்தையே பிரதானமாகக் கையில் எடுத்தன.

இதன் எதிரொலியாக கேரளாவில் மொத்தமுள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் 19 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வென்றது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக கேரளாவில்தான் காங்கிரஸ் கட்சிக்கு 15 எம்.பி.க்கள் கிடைத்தனர். மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆலப்புழா தொகுதி மட்டுமே கிடைத்தது.

கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டது, ரேஷன் கடைகளின் வழியாக இலவசமாக மளிகைப் பொருட்களை விநியோகித்து வருவது,இரண்டு பெருமழைகளை நேர்த்தியாகஎதிர்கொண்டது ஆகியவற்றால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நல்ல பெயர் இருந்தாலும் கூட சபரிமலை விவகாரம் மார்க்சிஸ்ட் கட்சியை அச்சுறுத்திவருகிறது.

கேரளாவில் சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்புகூறியது. அதை கேரள அரசு நிறைவேற்ற முயன்றது. இதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. ஐயப்ப பக்தர்கள், இந்து இயக்கங்கள் சார்பில் நடந்த இந்தப் போராட்டங்களுக்கு காங்கிரஸ், பாஜக கட்சிகளும் ஆதரவு கொடுத்திருந்தன.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ், பாஜக கட்சிகள் முதலில் ஆதரித்தன. ராகுல் காந்தியும், கேரள மாநில பாஜக தலைவர் ஓ.ராஜகோபாலும் இது ஒரு வரலாறு என்றே நெகிழ்ந்தனர். இந்நிலையில்தான் சித்தார் கிராமத்தில் முதன் முதலில் தீர்ப்புக்கு எதிராக போராட்டம் தொடங்கியது. அந்தப் போராட்டம் ஐயப்ப பக்தர்களாலேயே முன்னெடுக்கப்பட்டது.

காங்கிரஸ் மாற்றம்

கேரள அரசியல் விமர்சகரான சன்னிகுட்டி ஆப்ரகாம் இதுகுறித்து கூறுகையில், ‘‘ஆரம்பத்தில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே இந்தத் தீர்ப்பை வரவேற்கும் முடிவில்தான் இருந்தன. ஒரு கட்டத்தில் ஐயப்ப பக்தர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தைப் பார்த்து விட்டு போராட்டத்துக்கு பாஜக ஆதரவு கொடுத்தது.

இந்நிலையில்தான் கேரள மாநிலத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திக்கு நாமும் இதற்கு ஆதரவு கொடுக்காவிட்டால் இதன் மொத்த பலனையும் பாஜக அறுவடை செய்து விடும் என கடிதம் எழுதினார்கள். அதன்பின்பு தான் கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்னும் நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சியின் முடிவை மாற்றினார் ராகுல்’’ என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டசபைத் தேர்தலிலும் இவ்விவகாரம் எதிரொலிக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சியும் நன்
றாகவே உணர்ந்துள்ளது. அதனால்தான் சபரிமலை போராட்டம் தொடர்பாக போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தேர்தல் நேரத்தில் ரத்து செய்தது.

ஆனாலும் போராடியவர்கள் மத்தியில் அது மார்க்சிஸ்ட் கட்சிக்கு நல்ல பெயரை உருவாக்கி தரவில்லை. நிலக்கலில் போராட்டம் நடத்தி வந்த அபிலாஷ் இதுகுறித்து கூறுகையில், ‘‘சபரிமலை போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட நான் 53 நாட்கள் சிறையில் இருந்தேன். நான் ஆரம்பத்தில் தீவிர இடதுசாரி ஆதரவாளர். ஆனால் நான் கட்சி உறுப்பினர் அல்ல. நான் எந்த கட்சியும் சார்ந்தவன் இல்லை என்பதால் யாரும் என்னை ஜாமீனிலும் எடுக்கவில்லை. அதனால் இப்போது நான் பாஜக.வில் சேர்ந்துவிட்டேன்’’ என்கிறார்.

இதேபோல் ஹார்ட்வேர் நிறுவனம் வைத்திருக்கும் பாஜக.வை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், ‘‘என் மீது 17 வழக்குகள் போட்டார்கள். நான் இதனால்என் தொழிலையே இழந்தேன். 2018-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்புதான் கொடுத்தது. அதை உடனே நிறைவேற்றுங்கள் என
உத்தரவிடவில்லை. ஆனால் நாத்திகத்தையே பிரதானமாகக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் அதைச் செய்தது’’ என்கிறார்.

அனீஷ் என்ற பக்தரோ, காவலர்களுக்கு பயந்து தான் காட்டுக்குள் 6 நாட்கள் ஒளிந்திருந்ததாகவும், ஒருகட்டத்தில் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட்டதாகவும் சொல் கிறார்.

பெண் பக்தையான மினியோ, என் மாமா உன்னிதன் பாடல் பாடி போராட்டம் செய்து கொண்டிருந்தார்.கம்யூனிஸ்ட்களால் குறி வைக்கப்பட்டு அவர் மீது கல் வீசப்பட்டது. இதில் தலையில் காயம்பட்டு அவர் உயிர் இழந்தார் என்கிறார். ஆண்டுகள் இரண்டு ஓடிவிட்டாலும் பக்தர்களின் மனதில் இந்த சம்பவங்கள் எல்லாம் ஆறாத வடுவாகவே பதிந்துள்ளன.

கட்சிகள் நாடகம்

ஐயப்ப பக்தரான வேணுகோபாலன் நாயர், ‘‘இதில் சகல கட்சிகளும் அரசியலே செய்கின்றன. கடந்த 2019-ம் ஆண்டு, பத்தனம்திட்டாவில் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டிய சபரிமலை விவகாரத்தில் மத்திய அரசு தலையிடும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய அரசும் தலையிடவில்லை. ஆரம்பத்தில் தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸும் ஓட்டுக்காகவே எதிர்ப்பு முடிவை எடுத்தது.

உண்மையில் சொல்லப் போனால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நைஷ்டிகபிரம்மச்சாரி கோலத்தில் இருக்கும் ஐயப்பனின் புனிதத்தை அவரது பக்தர்கள் தான் காப்பாற்றி வருகிறார்கள்’’ என்கிறார்.

காங்கிரஸ், பாஜக கட்சிகள் தேர்தல் அறிக்கையில் சபரிமலை விவகாரத்தை பிரதானமாக கையில் எடுத்துள்ளன. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி அனைத்து தரப்பு மக்களிடமும் கலந்தாலோசித்த பின்னரே உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று சொல்லியுள்ளது. கேரளாவில் கட்சிகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டு ஐயப்பனின் பக்தர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x