Published : 25 Mar 2021 06:40 PM
Last Updated : 25 Mar 2021 06:40 PM

தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டால் மீண்டும் கரோனா வருமா?- 5 சந்தேகங்களுக்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம்

இந்தியாவில் கரோனா அலை பரவத் தொடங்கி கட்டுக்குள் வந்து தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் கரோனா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,476 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,87,534 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 26,490 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,12,31,650 பேர் குணமடைந்தனர்.

கரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 251 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,60,692 ஆக அதிகரிதுள்ளது.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,95,192 ஆக உள்ள நிலையில் இதுவரை 5,31,45,709 பேர் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கரோனா தடுப்பு மருந்துகளைச் செலுத்தும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

தடுப்பு மருந்து மீதான அச்சம்

கரோனாவுக்குத் தற்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. பல்வேறு உலக நாடுகளும் தகுதியுடைய வயதினருக்கு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவில், கரோனா தடுப்பு மருந்து குறித்த குழப்பங்களும், தயக்கங்களும் பரவலாக நிலவி வருகின்றன.

சமூக வலைதளங்களில் கரோனா தடுப்பு மருந்துகள் குறித்து வரும் வதந்திகளும் கரோனா தடுப்பு மருந்து குறித்த பொதுமக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன. எனவே கரோனா தடுப்பு மருந்து குறித்த சந்தேகளுக்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் அளித்துள்ள விளக்கங்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பு மருந்து முற்றிலுமாக கரோனா தொற்று பரவுவதைத் தடுக்குமா? தடுப்பு மருந்தைச் செலுத்திய பிறகும் கரோனா வருமா?

தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டால் நீங்கள் கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படுவது நிச்சயம் தடுக்கப்படும். ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலமும் வித்தியாசமானது. தடுப்பு மருந்தானது கரோனா வைரஸிலிருந்து உங்களுக்கு 100% பாதுகாப்பை அளிக்கும் என்று கூற முடியாது. ஆனால், கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடுவதற்கான அனைத்து சக்திகளையும் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வழங்கும் என்பது உறுதி.

அடுத்தது கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டவர்களில் 5% பேருக்குத் தொற்று வரலாம். அதற்கான காரணம் அந்தக் குறிப்பிட்ட நபர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் உருவாகாமல் இருக்கலாம். அல்லது அவர்கள் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். கரோனா வைரஸ் தன்னை வெளிப்படுத்த எடுத்துக்கொண்ட காலகட்டத்தில் அவர்கள் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்படும்.

அத்துடன் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட பிறகும் சில நாட்களுக்கு கரோனா தடுப்பு விதிமுறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால் கரோனா தடுப்பு மருந்து நமது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கு சில காலம் எடுத்துக்கொள்ளும். நாமும் அதற்கு அனுமதிக்க வேண்டும்.

கரோனா தடுப்பூசிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?

கரோனா தடுப்பூசி மட்டுமல்ல, நம் உடலில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அந்தவகையில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டவர்களுக்கு லேசான காய்ச்சல், ஊசி செலுத்திய இடத்தில் வலி, உடல் வலி, சளி, தலைவலி ஆகியவை வரலாம்.

கருத்தரிக்க விரும்புகிறவர்களும், கர்ப்பிணிகளும், குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளலாமா?

கரோனா தடுப்பு மருந்துகளால் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்து ஏற்படுமா? என்று கேட்டால், எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அது உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் கருத்தரிப்பு காலத்தில் பெண்களுக்கு கரோனா பாதிப்பு ( இணை நோயும் இருப்பின்) ஏற்படுவது சற்று ஆபத்தானதுதான். ஆகவே சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று அவர்கள் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்த ஆலோசித்துக் கொள்ளலாம்.

அவ்வாறே குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திய பிறகு குழந்தைகளுக்குப் பாலூட்டுவதில் சிக்கல் ஏற்படும் என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் தாய்மார்கள் இது தொடர்பான மருத்துவர்களை அணுகி ஆலோசித்த பிறகு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்ளலாம்.

கரோனா தடுப்பு மருந்துகளால் நமது உடலின் மரபணுவில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

நிச்சயமாக இல்லை. கரோனா தடுப்பு மருந்து நமது உடலின் மரபணுவில் எந்த மாற்றத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவை நம் உடலில் சென்ற பிறகு கரோனா வைரஸுக்கு எதிராக இயற்கையாக உள்ள நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் பணியையே பிரதானமாகச் செய்கின்றன.

நான் ஏற்கெனவே கரோனாவினால் பாதிக்கப்பட்டுவிட்டேன். நான் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்ள வேண்டுமா?

நிச்சயமாக நீங்கள் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள் மீண்டும் கரோனாவினால் பாதிக்கப்படாமல் எவ்வளவு காலம் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்பதை மருத்துவ நிபுணர்கள் இதுவரை கணிக்கவில்லை. எனவே நீங்கள் தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்வது நல்லது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x