Last Updated : 29 Nov, 2015 12:00 PM

 

Published : 29 Nov 2015 12:00 PM
Last Updated : 29 Nov 2015 12:00 PM

இந்திய வீரர்களுக்கு திறமை இல்லையா?

இஸ்லாமிக் ஸ்டேட் அல்லது ஐஎஸ்ஐஎஸ் என்றழைக்கப்படும் தீவிரவாத அமைப்பு பற்றி சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை படித்து எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இந்தியர்கள் உட்பட தெற்காசிய முஸ்லிம்கள், இராக், சிரியாவின் போர் முனையில் சண்டையிடுவதற்கு சிறந்தவர்கள் அல்ல என்று அதில் கூறப்பட்டிருந்தது.

அரேபிய வீரர்களைவிட தெற்காசியர்கள் சிறந்த வீரர்கள் அல்ல என்றும் அரேபியர்களை விட ஐஎஸ்.ஸில் சேரும் இந்தியர் கள் உட்பட தெற்காசிய நாட்டினருக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலை வெளிநாட்டு உளவு அமைப்புகள், இந்திய புலனாய்வு துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகளில் இருந்து தீவிரவாத இயக்கத்தில் சேருபவர்களை இரண்டாம் பட்சமாகவே ஐஎஸ் கருதுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. நைஜீரியா, சூடான் நாட்டினரின் போர் திறமை பற்றிய வரலாறு எனக்கு அவ்வளவாக தெரியாது.

ஆனால் வரலாற்றை பார்க்கும்போது இந்தியர்கள் சிறந்த போர் திறன் மிக்கவர்களாகவே இருந்துள்ளனர். தொழில்முறையான இந்திய வீரர்கள் பற்றிய குறிப்பு கி.மு. 479-ம் ஆண்டில் கிரேக்க வரலாற்றில் கிடைக்கிறது. கிரேக்கத்தின் பிளாட்டா என்ற இடத்தில் இரானியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் அப்போது போர் நடந்தது.

கிரேக்கத்தின் மிகச்சிறந்த வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸ், அந்தப் போரைப் பற்றியும் இருதரப்பின் வியூகம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் போரின் போது பெர்சிய மன்னன் ஜெர்க்சஸ், இந்தியாவில் இருந்து பணத்துக்கு வீரர்களை வரவழைத்து கிரேக்கத்தை ஆக்கிரமிக்க போரிட்ட தகவல்களை ஹெரோடோடஸ் பதிவு செய்துள்ளார்.

அந்தப் போரில் பெர்சியர்கள் தோல்வி அடைந்தாலும், இந்தியர்கள் மிகத் திறமையாக செயல்பட்டுள்ளனர். அதன்பின் நூற்றாண்டு கழிந்த நிலையில், பஞ்சாபை அலெக்சாண்டர் ஆக்கிரமித்த சம்பவங்கள் பற்றி மற்றொரு கிரேக்க வரலாற்றாசிரியர் அர்ரியன் எழுதி உள்ளார். மாசிடோனியன் படைகளிடம் இருந்து தங்கள் குடியிருப்புகளை பாதுகாத்துக் கொள்ள கூலிப்படையினரைதான் பஞ்சாப் கிராம மக்கள் அமர்த்தியுள்ளனர். அவர்கள் மூலம்தான் மிகக் கடுமையான எதிர்ப்பை அலெக்சாண்டர் சந்தித்துள்ளார்.

பணத்துக்காக போரிடும் தொழிலை செய்த இந்திய வீரர்கள் அதில் திறமையாகவே செயல்பட்டுள்ளனர். அதனால், பஞ்சாபியர்களுடன் அலெக் சாண்டர் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்பிறகு அவர்களுக்கு துரோகம் இழைத்தார். அவர்களை படுகொலை செய்தார்.

வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கடும் போர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் உலகப் போரின் போது, 1915-ம் ஆண்டு துருக்கியில் கமாண்டராக இருந்த முஸ்தபா கமால் அர்தாதுர்க், தனது படையில் இந்திய வீரர்களை சேர்த்துக் கொண்டார். அப்போதுதான் பதுங்கு குழிகள் அமைத்து போர் நடத்தினர். இந்த தந்திரத்தை கண்டுபிடித்தவர்கள் இந்திய வீரர்கள்தான்.

இங்கிலாந்தை சேர்ந்த ராணுவ வரலாற்றாசிரியர் ஜான் கீகன் தனது முதல் உலகப் போர் என்ற நூலில், “பதுங்கு குழிகள் அமைத்து முதலில் போரிட்டது கடந்த 1914-ம் ஆண்டு நவம்பர் மாதம் இரவில்தான். பெல்ஜியத்தின் யெப்ரஸ் பகுதியில் அந்த சண்டை நடந்தது. இதில் அப்போதைய இந்திய ராணுவத்தினர் 39-வது கார்வால் ரைபிள்ஸ் படை பிரிவினர் மிக திறமையாக போரிட்டுள்ளனர்.

எதிரிகளின் பகுதிக்குள் நள்ளிரவில் நுழைந்து தாக்குதல் நடத்துவது இந்திய வீரர்களுக்கு வழக்கமானதாக இருந்தது. பழங்குடியினத்தவரின் இந்த வழக்கம் பின்னர் மேற்கத்திய ராணுவத்தில் அறிமுகமானது. இதுபோன்ற பல உதாரணங்களால் இந்திய வீரர்களிடம் துணிச்சல், திறமை போன்றவற்றுக்கு குறையில்லை என்பது தெரி கிறது.

இங்கிலாந்தை சேர்ந்த வரலாற்றாசிரியர் மேக்ஸ் ஹாஸ்டிங்ஸ் தனது ‘கேட்டஸ்டிராபி: யூரோப் கோஸ் டு வார் 1914’ என்ற நூலில், “இந்திய படைகள்தான் எப்படி காவல் காப்பது (ரோந்து பணி) என்பதை பிரிட்டிஷாருக்கு கற்றுக் கொடுத்தனர்” என்று எழுதியுள்ளார்.

முகலாய சாம்ராஜ்யத்தின் சரிவு பற்றி வரலாற்றாசிரியர் சர் ஜாதுநாத் சர்க்கார் 4 தொகுதிகள் எழுதியுள்ளார். அதில் ராஜபுத்திர வம்சத்தினரின் (சிசோடியா, கச்வாஹா, ரதோர் பிரிவினர்) திறமையான போர் முறைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதுதான் பிரச்சினை. ரதோர்கள் இரு குழுவினராக போர் புரிந்துள்ளனர். ஒரு தரப்பில் இருந்த சில டஜன் ரதோர் வீரர்கள், எதிர் தரப்பில் இருந்த ஒரு லட்சம் ரதோர் வீரர்களை சிதறடித்துள்ளனர் என்பதை படித்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தியைப் படித்தேன். மது பாரில் 2 பிரிட்டிஷ் படையினருக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருதரப்பினர் மது போதையில் அடாவடித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். எதிர் தரப்பில் இருந்த கூர்க்கா வீரர்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்துள்ளனர். ஆனால், போதையில் சண்டை போட்டவர்களை மிக எளிதாக துவம்சம் செய்துள்ளனர்.

இந்திய வீரர்களுக்கு எப்போதும் தேவையானது என்னவென்றால், சிறந்த தலைமைதான். அதை ஐஎஸ் அமைப்பில் உள்ள அரேபியர்கள் தருவார்கள் என்பது எனக்கு சந்தேகம்தான். அதற்காக நன்றிதான் சொல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x