

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரில் 65 வெளிநாட்டு தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும், அதில் 55 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பல தீவிரவாதிகள், தாக்குதல்களை முயற்சிப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளன. மொத்தமுள்ள 65 வெளிநாட்டு தீவிரவாதிகளில், 55 பேர் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகிறது. எஞ்சிய 10 பேர், பெரிய தீவிரவாத அமைப்புகளின் ஆதரவுடன் செயல்படும் சிறிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் வகையில், ஜம்மு - காஷ்மீரின் தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்களை பாதுகாப்புப் படையினர் அமைத்துள்ளனர். இவற்றில் பல முகாம்கள் கடல் மட்டத்திலிருந்து 10,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மலைப்பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும், தீவிரவாதிகள் காடுகள் மற்றும் மலைப்பகுதிகளை மறைவிடங்களாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஜம்மு - காஷ்மீர் போலீஸார் இந்த முகாம்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்