Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 03:13 AM

பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட சவால்களை முறியடித்துள்ளோம்: பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி

பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட அனைத்து சவால்களையும் முறியடித்துள்ளோம் என்று பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசிய விஷயங்கள் குறித்து மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா வைரஸ்பரவுவது நாட்டில் அதிகரித்தது. இதையடுத்து நாட்டில் பொது முடக்கத்தை அமல்படுத்தி பெருந்தொற்றான கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டோம். அதன் பின்னர் கரோனா வைரஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு வழிகாட்டினோம். தற்போது முதியவர்கள், 45 வயதுக்குமேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், முன்களப் பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த பெருந்தொற்று காலத்திலும் பல்வேறு சவால்களை நாடு மேற்கொண்டது. லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறல், புயல், நிலநடுக்கம், வெட்டுக்கிளிகள் படையெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தோன்றின.

அந்த சவால்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்தோம். பல்வேறு பிரச்சினைகளை பெருந்தொற்று காலத்திலும் சமாளித்து இந்தியா வலுவான நாடாக எழுந்துள்ளது.

பிரச்சினை காலத்திலும் திறம்பட செயல்பட்டு வலுவான நாடாக இந்தியா இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தினோம்.

20 வருடங்களுக்கும் மேலாக விடுமுறையின்றி பணியாற்றி வருகிறேன். முதலில் குஜராத் மாநில முதல்வராகவும், தற்போது நாட்டின் பிரதமராகவும் நான் தொடர்ந்து மக்கள் நலனுக்காக பணியாற்றி வருகிறேன். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும். இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x