Published : 02 Nov 2015 09:05 PM
Last Updated : 02 Nov 2015 09:05 PM

பசு வதை விவகாரத்தில் முஸ்லிம்களை குறை கூறுவது நியாயம் இல்லை: கே.என்.கோவிந்தாச்சார்யா தகவல்

பசு வதை விவகாரத்தில் முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டுவது நியாயம் இல்லை என்று ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி கே.என்.கோவிந்தாச்சார்யா தெரிவித்துள்ளார். மேலும் பசு வதைக்கு எதிராக வரும் 7-ம் தேதி நடத்த இருந்த போராட்டத்தை ரத்து செய்துள்ளார்.

பாஜகவில் உறுப்பினராக சேர்ந்து பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த கோவிந்தாச்சார்யா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 1998-ல் கட்சியிலிருந்து விலகினார்.

இப்போது ராஷ்ட்ரிய ஸ்வாபிமான் அந்தோலன் (ஆர்எஸ்ஏ) அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ள இவர், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் மற்றும் பசு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஆர்எஸ்ஏ அமைப்பின் சார்பில் பசு வதைக்கு எதிராக வரும் 7-ம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பசு பாதுகாப்பு என்பது மதம் சார்ந்த பிரச்சினை அல்ல. எதிர்பாராதவிதமாக மதப் பிரச்சினையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பசுக்களை வளர்த்து வரும் விவசாயிகள் அதை விற்கின்றனர். அங்கிருந்து பலரிடம் கைமாறி பசுக்கள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. இந்த விஷயத்தில் கடைசியாக இறைச்சியை சாப்பிடும் முஸ்லிம்களை மட்டும் குறை சொல்வது நியாயம் இல்லை.

1857-ல் ஏற்பட்ட புரட்சிக்குப் பிறகு பசுக்களை கொல்வது அதிகரித்தது. அப்போது ஆட்சியில் இருந்த பிரிட்டிஷார், இரு இனத்தவர்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காக இதை ஊக்குவித்தனர். முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில்கூட பசுக்கள் கொல்லப்பட்டன. ஆனால் அவ்வளவு அதிகமாக இல்லை.

இந்த விவகாரம் இப்போது அரசியலாக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பசு வதைக்கு எதிரான போராட்டத்தை நடத்த விரும்பவில்லை. எனவே ஏற்கெனவே திட்டமிட்டிருந்த இந்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x