Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் மாதம் ரூ.100 கோடி வசூலிக்க சொன்னதாக குற்றச்சாட்டு- நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் காரசார விவாதம்; சிவசேனா எம்.பி.க்கள் வெளிநடப்பு

புதுடெல்லி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானிவீட்டருகே சமீபத்தில் வெடிபொருட்கள் நிரப்பிய கார் நின்றிருந்தது. இதுதொடர்பாக ‘என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்றழைக்கப்படும் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சரியாக விசாரணை நடத்தவில்லை என்று கூறிமும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர்சிங் பதவியில் இருந்து மாற்றப்பட்டார்.

இதையடுத்து, ‘‘உள்துறை அமைச்சர் தேஷ்முக் மாதம் ரூ.100 கோடி வசூலித்து தர சொன்னார்’’ என்று முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பரம்பீர் சிங் கடிதம் அனுப்பினார். இது மகாராஷ்டிராவில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

இந்த விவகாரத்தில் தேஷ்முக் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பாஜக எம்எல்ஏ.க்கள் வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் நாடாளு மன்றத்தில் நேற்று எதிரொலித்தது. ‘‘மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதம் ரூ.100 கோடி வசூலித்து தர சொல்லியதாக முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம்எழுதி உள்ளார். இந்த விவகாரத்தில் அமைச்சர் தேஷ்முக் பதவி விலக வேண்டும். அல்லது அவரைமுதல்வர் உத்தவ் தாக்கரே பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து என்ஐஏ தீவிரமாக விசாரிக்க வேண்டும்’’ என்று கூறி பாஜக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

அவையில் சலசலப்பு

அவர்களுக்கு எதிராக சிவசேனா கட்சி எம்.பி.க்களும் கோஷமிட்டனர். ‘‘இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ஊழலில் அதிகமாகதிளைப்பவர்கள்தான் கூறுகின்றனர்’’ என்று குற்றம் சாட்டினர். இதனால் இரண்டு அவைகளிலும் சலசலப்பு ஏற்பட்டது.

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்தப் பிரச்சினையை எழுப்ப முயற்சித்தார். ஆனால், அவைத் தலைவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், மகாராஷ்டிரா அரசை கலைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் கூக்குரலிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராஜினாமா செய்ய வேண்டும்

மக்களவையில் மும்பை வடகிழக்கு தொகுதி எம்.பி. மனோஜ் கோடக் பேசுகையில், ‘‘மும்பையில் மட்டும் ரூ.100 கோடி வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மற்ற நகரங் களில் இருந்து எவ்வளவு பணம் வசூலிக்கப்படுகிறது? இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அமைச்சர் தேஷ்முக் ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றார்.

அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா எம்.பி.க்களும்கூக்குரலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர். ஆனால், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்யாமல் அவையில் தொடர்ந்து அமர்ந்திருந்தனர். தங்கள் தரப்பு கருத்துகளை கூற அவையில் அனுமதிக்கவில்லை. அதனால் வெளிநடப்பு செய்தோம் என்று சிவசேனா எம்.பி.க்கள் கூறினார்.

இதற்கிடையில், அமைச்சர் தேஷ்முக் ரூ.100 கோடி வசூலிக்க சொன்னதாக எழுந்துள்ள புகார் குறித்து ஆளும் சிவசேனா கட்சி மூத்த நிர்வாகிகள் தனியாகவும், அரசு தரப்பில் உத்தவ் தாக்கரே தலைமையில் தனியாகவும் ஆலோசனை கூட்டம் நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், முன்னாள் கமிஷனர் பரம்பீர் சிங்கின் குற்றச்சாட்டை அமைச்சர் தேஷ்முக் மறுத்துள்ளார். மேலும், பரம்பீர் சிங் மீது அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாகவும் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x