Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

வரும் பருவமழை காலத்தில் மழைநீரை சிந்தாமல், சிதறாமல் சேமியுங்கள்: பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

வரும் பருவமழையின்போது மழைநீரை சிந்தாமல், சிதறாமல் சேமிக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு இடையே கேன், பெத்வா நதிகள் ஓடுகின்றன. இந்த இரு நதிகளையும் இணைக்கும் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தின் முன்னோட்டமாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.

மேலும் வரும் பருவ மழையின் போது மழைநீரை சேமிப்பது தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தையும் மத்திய ஜல சக்தி துறை நேற்று தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசியதாவது:

இன்று (மார்ச் 22) உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கேன்-பெத்வா நதிகள் இணைப்பு திட்டம் கையெழுத்தாகி உள்ளது. இத்திட்டத்தால் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தை சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறும். இரு மாநிலங்களும் அபார வளர்ச்சி பெறும். நீர் வளம், சிறந்த நீர் மேலாண்மை இன்றி வளர்ச்சி சாத்தியம் இல்லை. இந்தியா சுயசார்பை எட்டுவதுநீர் வளத்தை பொறுத்தே அமையும்.

நமது நாடு அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேநேரம் தண்ணீர் பற்றாக்குறை யும் சவாலாக உருவெடுத்து வருகிறது. 21-ம் நூற்றாண்டில் நீர்வளம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் உத்தரவாதத்தை அளிப்பது நமது கடமையாகும். இதை கருத்தில் கொண்டு நீர் மேலாண்மை திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துவருகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள், இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு துளி நீரில் பல மணி விதைகள், கங்கை திட்டம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத் தக்கவை. மழை நீரை முறையாக சேமித்தால், நிலத்தடி நீரை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதை கருத்தில் கொண்டு ஜல் சக்தி அபியான் திட்டத்தில் நகரங்கள், கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

வரும் பருவ மழை காலத்தில் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சிந்தாமல், சிதறாமல் சேமிக்க வேண்டும். இந்த இயக்கத்தை மாவட்ட ஆட்சியர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். ஏரி, குளம், கிணறுகளை தூர் வாரி மழைநீரை சேமிக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைநீர் கால்வாய்களை புனரமைக்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும்.

வாஜ்பாயின் கனவு நனவானது

மழைநீர் சேகரிப்பு மட்டுமன்றி நாட்டின் நதிகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நதிகளை பேணுவது அவசியம். கேன்-பெத்வா நதிகள் இணைப்பு, நாட்டின் முன்னோடி திட்டமாகும். இது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு ஆகும். அவரது கனவை உத்தர பிரதேச, மத்திய பிரதேச அரசுகள் நனவாக்கியுள்ளன. நீர் மேலாண்மையில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்தியா வழிகாட்டுகிறது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை 3.5 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2019 ஜூலையில் ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் மிக குறுகிய காலத்திலேயே புதிதாக 4 கோடி குடும்பங்களுக்கு குழாய் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக தண்ணீர் சோதனை திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது. கரோனா காலத்திலும்கூட தண்ணீர் சோதனையை மேற்கொள்ள சுமார் 4.5 லட்சம் பெண்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் தலா 5 பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர். நீர் மேலாண்மையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். அப்போது நிறைவான பலன்களைப் பெற முடியும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x