Published : 22 Mar 2021 07:42 PM
Last Updated : 22 Mar 2021 07:42 PM

கோவிஷீல்ட் தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்தும் காலம் 8 வாரங்களாக நீட்டிப்பு: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

படம் உதவி | ட்விட்டர்.

புதுடெல்லி

சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்தும் காலம் 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் இரு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன. ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் கோவாக்ஸின் மருந்தும், அஸ்ட்ராஜென்கா, சீரம் நிறுவனம் சார்பில் கோவிஷீல்ட் மருந்தும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது வயது முன்னுரிமை அடிப்படையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயது முதல் 59 வயதுள்ள இணை நோய்கள் இருப்போருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன

இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு 28 நாட்களுக்குப் பின் 2-வது டோஸ் மருந்து செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு முன்பு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா சார்பில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி ஒருவருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டு, 2-வது டோஸ் செலுத்தப்படும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி, 28 நாட்களுக்குப் பின் என்பதற்குப் பதிலாக 6 வாரங்கள் முதல் 8 வாரங்களுக்கு இடையே 2-வது டோஸ் செலுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் நீட்டிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு மாநிலங்களுக்கு எழுதிய கடிதத்தில், "அறிவியல்ரீதியாக புதிய ஆய்வுகளின் ஆதாரங்களின் அடிப்படையிலும், தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் 2-வது டோஸ் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதாவது முதல் டோஸ் செலுத்தப்பட்டு 28 நாட்களுக்குப் பின் அல்லாமல், 6 முதல் 8 வாரங்களுக்கு இடையே செலுத்த வேண்டும். அதாவது, இரு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி 6 முதல் 8 வாரங்களாக இருக்க வேண்டும். அதற்கு மேல் தாமதம் செய்யக்கூடாது" எனத் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்ட், கோவாக்ஸின் இரு தடுப்பூசிகளில், ஒரு தடுப்பூசியின் 2-வது டோஸைச் செலுத்திய 2 வாரங்களுக்குப் பின் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x