Last Updated : 22 Mar, 2021 06:04 PM

 

Published : 22 Mar 2021 06:04 PM
Last Updated : 22 Mar 2021 06:04 PM

கேரள காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவு: மாநிலத் துணைத் தலைவர் ரோசாகுட்டி திடீர் ராஜினாமா

கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு சோதனை மேல் சோதனை ஏற்படுகிறது.

அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ரோசாகுட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருத்து விலகுவதாக இன்று அறிவித்தார்.

ஏறக்குறைய 37 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியுடன் பின்னிப் பிணைந்து, பல்வேறு பதவிகள், போராட்டங்களை வகித்து வந்த ரோசாகுட்டி விலகியது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கேரளாவுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தி வந்துள்ள நேரத்தில் ரோசாகுட்டி ராஜினாமா செய்துள்ளார்.

ஏற்கெனவே மகிளா காங்கிரஸின் மூத்த தலைவர் லத்திகா சுபாஷ் தனக்குத் தேர்தலில் சீட் வழங்கவில்லை எனக் கூறி காங்கிரஸ் அலுவலகம் முன் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டார். இது பெரும் அதிர்வலையைக் கட்சிக்குள் ஏற்படுத்திய நிலையில் ரோசாகுட்டி விலகியுள்ளார்.

இதுகுறித்து ரோசாகுட்டி கூறுகையில், "நீண்டகால ஆலோசனைக்குப் பின்புதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். பெண்களை காங்கிரஸ் கட்சி ஓரம் கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோட்டயம் மாவட்டத்தில் எட்டமனூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், சமீபத்தில் லத்திகா சுபாஷ் தலையை மொட்டையடித்துக் கொண்டு கட்சியிலிருந்து வெளியேறினார்.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியாக வலுவான மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்க முடியவில்லை. பல்வேறு விவகாரங்களில் கட்சி எடுக்கும் நிலைப்பாடு அதிருப்தியாக இருந்ததால் விலகியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

கேரள மகளிர் ஆணையத்தின் தலைவராக ரோசாகுட்டி இருந்தார். 1991-96ஆம் ஆண்டில் வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்ரி தொகுதி எம்எல்ஏவாகவும் ரோசாகுட்டி இருந்தார்.

இந்தத் தேர்தலில் வயநாட்டின் கல்பேட்டா தொகுதியில் போட்டியிட ரோசாகுட்டி வாய்ப்பு கேட்டபோது, அவருக்கு மறுக்கப்பட்டு, டி.சித்திக்கிற்கு வழங்கப்பட்டது.

இதற்கிடையே இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போவதாக ரோசாகுட்டி தெரிவித்துள்ளார். இதையடுத்து, கண்ணூர் முன்னாள் எம்.பி. பி.கே.ஸ்ரீமதி, ரோசாகுட்டியைச் சந்தித்துப் பேசியுள்ளதால் காங்கிரஸ் கட்சி பெரும் சிக்கலில் இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x