Published : 20 Mar 2021 12:57 PM
Last Updated : 20 Mar 2021 12:57 PM

1886-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தை ரத்து செய்ய மனுத்தாக்கல்: மத்திய அரசு, தமிழகம், கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

முல்லைப் பெரியாறு அணை: கோப்புப்படம்

புதுடெல்லி

1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் மகாராஜாவுக்கும், ஆங்கிலேயர்களுக்கு உட்பட்ட சென்னை மாகாண கவர்னருக்கும் இடையே செய்யப்பட்ட முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரளப் பகுதியில் உள்ள 158 அடி கொள்ளளவு கொண்ட முல்லைப் பெரியாறு அணை ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குக்கின் கடும் உழைப்பாலும் முயற்சியாலும் 1885-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

இந்த அணையை 999 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கேரளத்தின் திருவிதாங்கூர் சமஸ்தானமும், ஆங்கிலேய அரசின் சென்னை மாகாண கவர்னரும் 1886-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அணை அமைந்துள்ள சுமார் 8 ஆயிரம் ஏக்கருக்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு சென்னை மாகாண நிர்வாகம் ஆண்டுக்கு 42,963 ரூபாய் குத்தகைக் கட்டணம் செலுத்த வேண்டும். அணையில் தேக்கப்படும் தண்ணீரும், அணையைப் பராமரிப்பதும் தமிழகத்தின் பொறுப்பாக அமைந்தது.

இந்நிலையில் 1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும், சென்னை மாகாணத்துக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி “சுரக்ஸா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட்” எனும் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

மனுதாரர் தாக்கல் செய்த மனுவில், “முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநில அரசுகளும் கருத்தில் கொள்ளவில்லை. நாட்டின் மிகப் பழமையான இந்த அணையிலிருந்து சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் அவசரகாலத்தில் வெளியேற்றப்படும்.

அந்தப் பாதையைத் தமிழக அரசு சரி செய்யவில்லை. அணைகளைப் பராமரித்தல் மற்றும் செயல்முறை தொடர்பான விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை. இது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். சரியான காலக்கெடுவுக்குள் அணையின் மராமத்துப் பணிகளை, அத்தியாவசியப் பராமரிப்புகளைத் தமிழக அரசு செய்யவில்லை.

அணை அமைந்திருக்கும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்துக்கு உரிமைதாரர்கள் கேரள மாநிலம்தான். தமிழகத்துக்கு அந்த நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட அந்தக் குத்தகையை ரத்து செய்ய வேண்டும். குத்தகைதாரர் விதிமுறைகளை, ஒப்பந்தத்தை மீறினால், குத்தகையை ரத்து செய்ய நிலத்தின் உரிமையாளருக்கு உரிமை உண்டு. ஆதலால், 1886-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கான்வில்கர், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று, மத்திய அரசு, தமிழகஅரசு, கேரள அரசு உள்ளிட்ட தொடர்புடைய மற்றவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x