Published : 19 Mar 2021 03:14 AM
Last Updated : 19 Mar 2021 03:14 AM

பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழல் மேம்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

பழைய வாகனங்களை அழிக்கும் முடிவால் காற்று மாசு குறைந்து சுற்றுச் சூழல் மேம்படும் என்று மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

வாகனங்கள் அழிப்பு கொள்கைகுறித்த விளக்க அறிக்கையை மக்களவையில் அமைச்சர் நேற்றுதாக்கல் செய்தார். இந்த நடவடிக்கையால் ஆட்டோமொபைல் துறையின் ஆண்டு விற்பனை வருமானம் ரூ.4.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயரும் என்றார்.

2021-22-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பழைய வாகனங்களை புழக்கத்திலிருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான கொள்கை விளக்கத்தை தரைவழி போக்குவரத்து அமைச்சகம் தயாரித்தது. இதன்படி தனி நபர் உபயோக வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலிருந்தால் அவற்றை புழக்கத்திலிருந்து நீக்குவது எனவும், அரசு மற்றும் பொது உபயோக வாகனங்களாயிருப்பின் 15 ஆண்டுகளுக்கு அதிகமாயிருப்பின் அவற்றை புழக்கத்திலிருந்து நீக்குவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பழைய வாகனங்களை அழித்துவிட்டு அதற்கான சான்றை காட்டும்தனி நபர் வாகன உரிமையாளருக்கு புதிய வாகனம் வாங்குதற்கான விலையில் 5 சதவீத சலுகை அளிக்கப்படும். இதை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சான்றை காட்டும் வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும் என்றுகுறிப்பிட்டார். இதன் மூலம் வாகனவிற்பனை அதிகரிக்கும். எரிபொருள் நுகர்வு குறையும். சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும். வாகனங்கள் புதிதாக இருப்பதால் பயணமும் பாதுகாப்பானதாக அமையும் என்றும் அவர் கூறினார்.

மேலும் வாகனங்களை அழிக்கும் பணியில் ஈடுபடும் தொழில் நிறுவனங்கள் முறைசார்ந்த நிறுவன அந்தஸ்தைப் பெறும். பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் கிடைக்கும் பொருட்கள் மறு சுழற்சிக்கு உதவியாக இருக்கும் என்றார். இது தொடர்பான அறிவிக்கையை மத்திய தரைவழிபோக்குவரத்து அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்றும் கூறினார்.அமைச்சகத்தின் கணக்குப்படி 51 லட்சம் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலானவை. இலகு ரக வாகனங்களில் 34 லட்சம் 15 ஆண்டுகளுக்கு மேலானவை. நடுத்தர மற்றும் கனரக வாகனங்களில் 15 ஆண்டுகளுக்கு மேலானவற்றின் எண்ணிக்கை 17 லட்சமாக உள்ளது. இந்த வாகனங்கள் வெளியிடும் புகையால் வழக்கமான புதிய வாகனங்கள் வெளியிடும் புகை அளவைக் காட்டிலும் 10 முதல் 12 மடங்கு அதிகம் என்றார்.

15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்குவதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x