Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் 7 ராணுவ அதிகாரி உட்பட 23 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு

ராணுவ அதிகாரிகள் பணி நியமனத்துக்கு லஞ்சம் கைமாறியதுதொடர்பான வழக்கில் 7 ராணுவஅதிகாரிகள் உட்பட 23 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

முப்படைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பணியாளர் தேர்வு வாரிய (எஸ்எஸ்பி) மையங்களில் நடைபெற்றது. இதன்படி, பஞ்சாப் மாநிலம் கபுர்லதலாமாவட்டத்தில் உள்ள ஒரு மையத்தில் இறுதிகட்ட பணி நியமன நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இந்த விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, டெல்லியில் உள்ள பேஸ் மருத்துவமனையில் நடந்த மருத்துவ தேர்வின்போது ராணுவ அதிகாரிகள் லட்சக் கணக்கில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு ராணுவம், சிபிஐ அமைப்பை கேட்டுக் கொண்டது.

இதன் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக டெல்லி பேஸ் மருத்துவமனை, லக்னோ, குவாஹாட்டி, விசாகப்பட்டினம் உட்பட நாட்டின் 13 நகரங்களில் உள்ள ராணுவ அலுவலகங்கள் உட்பட மொத்தம் 30 இடங்களில் நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இதனிடையே, ராணுவத்தைச் சேர்ந்த 5 லெப்டினன்ட் கர்னல்கள், ஒரு மேஜர் மற்றும் ஒரு லெப்டினன்ட் உட்பட 23 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த 23 பேரில் 17 பேர் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் ஆர்மி ஏர் டிபன்ஸ் படையின் லெப்டினன்ட் கர்னல் எம்விஎஸ்என்ஏ பகவான் இந்த முறைகேட்டுக்கு மூளையாக செயல்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இவரும் நைப் சுபேதார் குல்தீப் சிங்கும் லஞ்சம்வாங்கியதாகவும் சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது.

31 எஸ்எஸ்பி மையத்தைச் (வடக்கு) சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் சுரேந்தர் சிங், 6 மவுன்டெய்ன் டிவிஷன் ஆர்ட்னன்ஸ் பிரிவின் லெப்டினன்ட் கர்னல் ஒய்.எஸ்.சவுஹான், பணியாளர் தேர்வு வாரிய இயக்குநரகத்தின் லெப்டினன்ட் கர்னல் சுக்தேவ் அரோரா, ஜிடிஓ - தெற்கு தேர்வு மையத்தின் (பெங்களூரு) லெப்டினன்ட் கர்னல்வினய் மற்றும் மேஜர் பாவேஷ்குமார் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x