Last Updated : 30 Nov, 2015 10:54 AM

 

Published : 30 Nov 2015 10:54 AM
Last Updated : 30 Nov 2015 10:54 AM

தமிழக சிறைகளில் உள்ள பிரிட்டன் கைதிகளை விடுவிக்கக் கோரி மோடிக்கு கேமரூன் கடிதம்

தமிழக சிறைகளில் உள்ள பிரிட்டன் நாட்டுக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு, தூத்துக்குடி கடல் பகுதிக்கு ஆயுதங்களுடன் வந்த அமெரிக்காவின் அட்வன் போர்ட் என்ற தனியார் கடல் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர். தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 10.8 நாட்டிகல் மைல் தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த கப்பலை நோக்கி மர்ம படகு ஒன்று செல்வதைக் கண்டு கடலோர காவல் படையினர் அந்தக் கப்பலை சிறை பிடித்தனர்.

அதிலிருந்த பிரிட்டன் மாலுமிகள் 6 பேர் உட்பட 35 ஊழியர்களையும் கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். கப்பலில் அதிநவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் இருந்தன. கப்பலில் ஆயுதம் வைத்திருந்ததற்கான ஆவணங்களும் முறையாக இல்லை. இதனால், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஜான் ஆர்ம்ஸ்டாரங் விங்டன், நிக் டன் ஆஷிங்டன், ரே டிண்டால் செஸ்டர், பால் டவர்ஸ், நிகோலஸ் சிம்சன் கேட்டரிக், பில்லி இர்விங் கோனெல் ஆகிய 6 பேரும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்மையில் பிரதமர் மோடி பிரிட்டன் சென்றிருந்தார். அவர் பிரிட்டன் செல்வதற்கு முன்னதாக பிரிட்டன் பிரதமர் அலுவலகத்திலிருந்து மோடிக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் எழுதியிருந்தார். அதில், தமிழக சிறைகளில் உள்ள பிரிட்டன் நாட்டுக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. மேலும், தமிழக சிறையில் உள்ள 6 பேரது குடும்பத்தினர் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் எனவே அவர்களை விடுவிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "பிரிட்டன் பிரதமர் எழுதிய கடிதம் குறித்து அறிவோம். இது தொடர்பாக தமிழக அரசிடம் பல முறை ஆலோசித்துவிட்டோம். இப்பிரச்சினையில் தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.

மற்றொரு அதிகாரி கூறும்போது, "சட்ட நடவடிக்கைகளில் சமரசம் செய்து கொள்ளாமல் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என நாங்கள் முயன்றுவருகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x