Published : 25 Jun 2014 08:58 AM
Last Updated : 25 Jun 2014 08:58 AM

நாடாளுமன்றக் கூட்டத்துக்கு முன்பு புதிய ஆளுநர்கள் நியமனம்: பாஜக மூத்த தலைவர்களை நியமிக்க வாய்ப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பாஜக மூத்த தலைவர்கள் சிலரை அப்பதவியில் அமர்த்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட ஆளு நர்கள் அனைவரும் பதவி விலகிய பின்பு, புதிய ஆளுநர்கள் நியமனம் நடைபெறும்.

ஏற்கெனவே, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர் கள் தங்களின் பதவியை ராஜி னாமா செய்துவிட்டனர். இதைத் தொடர்ந்து மேலும் சில ஆளுநர்கள் பதவி விலகுவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரத்தில் கூறப்படுவதாவது: “புதிய ஆளுநர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இப்பணி நிறைவு பெற்றதும், பதவி விலகுமாறு சம்பந் தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத் தும். குறைந்தது 10 ஆளுநர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நியமனங்கள் அனைத்தும் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக நடைபெறும்” என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

இதனிடையே கோவா ஆளுநர் பி.வி.வான்சூ, ஹரியாணா ஆளுநர் ஜகன்னாத் பஹாடியா ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப் புள்ளதாகக் கருதப்படும் பாஜக மூத்த தலைவர் லால்ஜி டாண்டனும், ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசியுள்ளார்.

நாராயணன் விரைவில் விலகல்?

இதற்கிடையே, காங்கிரஸ் ஆட்சியில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ள அஸ்வினி குமார் (நாகாலாந்து), எம்.கே.நாராயணன் (மேற்கு வங்கம்) ஆகியோர் ராஜினாமா செய்ய முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு முறைப்படி கேட்டுக் கொண்டவுடனேயே தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அஸ்வினி குமார் தெரிவித்ததாக அவ ருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

ராஜினாமா செய்வது தொடர்பாக யோசனை செய்வதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று எம்.கே.நாராயணன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்கரெட் ஆல்வா மறுப்பு

ஆளுநர்களை ராஜினாமா செய்யு மாறு மத்திய அரசு நெருக்குதல் தருவ தாகக் கூறப்படுவதை காங்கிரஸ் ஆட்சி யின்போது ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்ட மார்கரெட் ஆல்வா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “ஆளுநர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தலை யிடவில்லை. தங்களின் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்பே சில ஆளுநர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த விவகாரத்தை ஒவ்வொருவரும் எவ்வாறு அணுகுகின்றனர் என்பதை பொறுத்தது அது. எனது பதவி காலம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை உள்ளது. அது வரை பதவியில் இருப்பேன்” என்றார்.

மோடிக்கு குரேஷி பாராட்டு

இதனிடையே உத்தரகண்ட் ஆளுநர் ஆஸிஸ் குரேஷி, உத்தரப் பிரதேசத்தின் ஆளுநராக கடந்த திங்கள்கிழமை கூடுதல் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தனக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளது, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் பெருந்தன்மையை காட்டுகிறது என்று குரேஷி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச ஆளுநராக இருந்த பி.எல்.ஜோஷி சமீபத்தில் ராஜினாமா செய்ததையடுத்து, குரேஷிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x