Last Updated : 13 Mar, 2021 04:32 PM

 

Published : 13 Mar 2021 04:32 PM
Last Updated : 13 Mar 2021 04:32 PM

கேரளாவில் காங்கிரஸ் கட்சி 91 இடங்களில் போட்டி: நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பேட்டி அளித்த காட்சி: படம்| ஏஎன்ஐ.

திருவனந்தபுரம்

கேரளாவில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 91 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 81 வேட்பாளர்களின் பெயர்கள் நாளை அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களைப் பிரித்துக் கொடுத்துள்ளது.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 87 இடங்களில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை 91 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 81 வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதால், நாளை அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் கூட்டணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 27 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் நேற்று அந்தக் கட்சி வெளியிட்டது.

கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் புகழ்பெற்று இருக்கும் பி.ஜே. ஜோஸப் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரங்கலகுடா, கொத்தமங்கலம், தொடுபுழா, இடுக்கி, கடுதுருத்தி, ஈட்டுமனூர், சங்கனாச்சேரி, குட்டநாடு, திருவல்லா, திருகரிப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்சிக்கு சாவரா, மட்டானூர், குன்னத்தூர், இரவிபுரம், அட்டிங்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மணி சி கப்பன் தலைமையிலான கட்சிக்கு இளத்தூர், பாலா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணியில் இருந்த கப்பனுக்கு பாலா தொகுதி வழங்காததால், அதிலிருந்து பிரிந்து வந்தார். தற்போது பாலா தொகுதியில் ஜோஸ் கே.மாணி காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கப்பன் போட்டியிடுகிறார்.

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா தொகுதி ஜனதா தளம் கட்சிக்கும், சிஎம்பி கட்சி நென்மாரா தொகுதியிலும், அனூப் ஜேக்கப் தலைமையிலான காங்கிரஸ் கட்சி பிரவோம் தொகுதியிலும் போட்டியிடுகிறது.

கேரளாவில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 91 தொகுதிகளில் 81 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. இதில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி சொந்தத் தொகுதியான புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிடாமல் திருவனந்தபுரம் அருகே இருக்கும், நீமம் தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உம்மன் சாண்டி, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட வேண்டும் எனக் கோரி ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்கள் உம்மன் சாண்டி வீட்டு முன் திரண்டு இன்று போராட்டம் நடத்தினர்.

அப்போது உம்மன் சாண்டி நிருபர்களிடம் பேசுகையில், "கேரளாவில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும். நீமம் தொகுதியில் யார் போட்டியிடப்போகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும் அதுவரை அமைதியாக இருங்கள். எந்தத் தொகுதியிலும் வேட்பாளர்கள் அறிவிப்பதில் குழப்பம் ஏதும் இல்லை. நாளை டெல்லி தலைமை வேட்பாளர்களை அறிவிக்கும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x