Published : 13 Mar 2021 03:11 AM
Last Updated : 13 Mar 2021 03:11 AM

சுதந்திர போராட்ட தலைவர்களை இந்தியா மறக்காது: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

காந்தியடிகளின் தண்டி யாத்திரையை நினைவுகூரும் வகையில் அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தண்டி யாத்திரையை தொடங்கி வைத்தார். அப்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து கலைநிகழ்ச்சி நடத்தினர். படம்: பிடிஐ

அகமதாபாத்

சுதந்திர போராட்ட தலைவர்களை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது உப்புக்கு வரி விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1930 மார்ச் 12-ம் தேதி குஜராத்தின் தண்டியில் தடையை மீறி உப்பு எடுக்கும் நடைபயணத்தை தேசத்தந்தை காந்தியடிகள் தொடங்கினார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி காந்தியடிகளின் தண்டி யாத்திரையை நினைவு கூரும் வகையில் அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் மோடி நேற்று தண்டி யாத் திரையை தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 'ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்' கொண்டாட்டம் ஓராண்டு வரை நடைபெற உள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிதொடங்கி அடுத்த ஆண்டு ஆக. 15-ம் தேதி வரை நாடு முழுவதும் 75 முக்கிய இடங்களில் விழாக்கள் நடத்தப்படும். 130 கோடி இந்தியர்களும் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறேன். இந்தநேரத்தில் சுதந்திர போராட்டத்துக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த தேசத் தந்தை காந்தியடிகள், இதர தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

அவர்களது சிந்தனைகள், சாதனைகளை சொந்தமாக்கி, சுயசார்பு இந்தியா கனவை நோக்கி பயணம் செய்ய வேண்டும். சுதந்திர போராட்டத்தின் தியாகம், சிந்தனைகள், சாதனைகள், செயல் திறன், பிரச்சினைக்கு தீர்வு காணும் திறன் ஆகிய 5 அம்சங்களை அடிப்படையாக கொண்டு நமது கனவுகள், கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

உப்பு என்பது சாதாரண விஷயம் கிடையாது. நேர்மை, நம்பிக்கை, விசுவாசம், உழைப்பு, சமஉரிமை, சுயசார்பு ஆகியவற்றின் சின்னமாக உப்பு திகழ்கிறது. இந்தியர்களின் சுயசார்பை பிரிட்டிஷ் அரசு தட்டிப் பறிக்க முயன்றது. பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகும் உப்பை மட்டுமே இந்தியர்கள் நம்பியிருக்க வேண்டும் என்று சதி செய்தது.

மக்களின் நாடித் துடிப்பு, வேதனையை புரிந்து கொண்ட காந்தியடிகள், உப்பு வரிக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை தொடங்கினார்.

டெல்லி சலோ என்ற கோஷத் துடன் சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்திய சுபாஷ் சந்திர போஸ், சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழக்கமிட்ட பாலகங்காதர திலகர், பண்டிட் நேரு, சர்தார் வல்லபபாய் படேல்,ராணி லட்சுமிபாய் என எண்ணற்ற தலைவர்கள் சுதந்திர போராட்டத்தை முன்னின்று வழிநடத்தினர். அவர்களை இந்தியா ஒருபோதும் மறக்காது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அந்தமானில் மூவர்ண கொடியேற்றிய இடம் பொலிவூட்டப்பட்டிருக்கிறது.

நாம் யாருக்கும் துன்பம் கொடுப்பது கிடையாது. அடுத்த வர்களின் துன்பத்தை, துயரத்தை துடைத்து வருகிறோம். இதுதான் இந்தியாவின் பண்பாடு. கரோனா காலகட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை உலகம் முழுவதும் அனுப்பி வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டுகி றேன். அவற்றின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலப்படுத்த வேண்டும். சுயசார்பு இந்தியா திட்டம் காந்தியடிகள், சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x