Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

நாசிக்கில் 11 ஆண்டுகள் சேவையாற்றிய மோப்ப நாய்க்கு சிறப்பு பிரியாவிடை

நாசிக் காவல் துறையில் 11 ஆண்டுகள் சேவையாற்றிய ஒரு மோப்ப நாய்க்கு நேற்று வெகு சிறப்பான பிரியாவிடை அளிக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் காவல் துறையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கச் செய்தல் பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவில் 11 ஆண்டுகள் சேவையாற்றிய ‘ஸ்பைக்’ என்ற மோப்ப நாய்க்கு பணி ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நாய்க்கு நேற்று வெகு சிறப்பான பிரியாவிடை அளிக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றை மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ட்விட்டரில் வெளியிட்டுள்ளர்.

அதில், பலூன்கள் மற்றும்ரோஜாப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட போலீஸ் ஜீப் ஒன்றின் பானட் மீது மோப்ப நாய் ‘ஸ்பைக்’ படுத்திருக்க, காவல் துறையில் அதன் சிறந்த பங்களிப்பை பாராட்டும் வகையில் ஜீப்பின் இருபுறமும் போலீஸார் கைதட்டி ஒலி எழுப்பியவாறு நடந்துவரும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் தேஷ்முக் தனது பதிவில், “ஸ்பைக் வெறும் நாய் மட்டுமல்ல, போலீஸ் குடும்பத்தில் ஓர் அங்கமாகிவிட்ட ஜீவன். நாட்டுக்கு அது செய்த சேவைக்காக நான் அதற்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

போலீஸ் படையில் மோப்ப நாய்கள் சேர்க்கப்படுவதற்கு முன்அவற்றுக்கு இளம் வயதில் இருந்து கடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனை வளர்க்கும் பயிற்சியாளர்களிடம் மிக நெருங்கிய உறவை அவை பேணுகின்றன. வெடிபொருட்கள், துப்பாக்கிகள், போதைப் பொருட்கள் போன்றவற்றை கண்டுபிடிக்கவும் அடையாளம் காணவும் அவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மனித வியர்வை மற்றும் சிறுநீரை மோப்பம் பிடிப்பதன் மூலம் தங்கள் படையில் கரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிவதற்காக ராணுவம் தனது மோப்ப நாய்களுக்கு சமீபத்தில் பயிற்சி அளிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x