Last Updated : 17 Nov, 2015 09:20 AM

 

Published : 17 Nov 2015 09:20 AM
Last Updated : 17 Nov 2015 09:20 AM

பாரீஸில் தீவிரவாதிகள் தாக்குதல் பற்றி உ.பி. அமைச்சர் சர்ச்சை கருத்து

பாரீஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் பற்றி உத்தரப் பிரதேச அமைச்சர் ஆசம் கான் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆசம்கான் கூறியதாவது:

பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தவறானதாகும். அதேவேளையில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் அரபு நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி அப்பாவிகளை கொல்வது நியாயமானதல்ல.

நாம் பார்க்க வேண்டியது முதலில் யாரை யார் கொன்றது என்பதே ஆகும். அதற்கு பின்னர் பதிலடி கொடுத்தவர் யார் என்பதை பார்க்க வேண்டும். இது விவாதிக்கப்பட வேண்டிய விவகாரம். அப்பாவிகளை ஆளில்லா விமானங்கள் மூலமாக தாக்கி கொல்வது நியாயமாகாது. யார் தீவிரவாதி, யார் தவறு செய்தவர் என்பதை வரலாறு முடிவு செய்யும். இது குறித்து வல்லரசுகள் ஆராய வேண்டும். இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமாகும். அடுத்த உலகப்போருக்கு உலகம் செல்கிறதோ என்ற அச்சம் உள்ளது. இவ்வாறு ஆசம்கான் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக செயலாளர் சித்தார்த் நாத் சிங் கூறியதாவது:

ஆசம் கான் தெரிவித்த கருத்து குறித்து சமாஜ்வாதி கட்சி தனது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும். இல்லையெனில் அவரது கருத்தை சமாஜ்வாதி ஆதரிப்பதாகவே கருத வேண்டிய நிலை உருவாகும்.

மூத்த அமைச்சரான ஆசம் கான் தெரிவித்த கருத்து துரதிருஷ்டவசமானதாகும். இதனால் உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயர் கிடைக்கும். மேலும் தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆசம் கான் வார்த்தைகள் ஏற்கத்தக்கவை அல்ல.

இஸ்லாமின் எதிரியாக மாறிவிட்டது ஐஎஸ் அமைப்பு. ஐஎஸ் அமைப்பின் செயல் பாடுகள் உலகில் வாழும் முஸ்லிம்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகின்றன.

ஐஎஸ் அமைப்பை தனிமைப்படுத்தி ஒழிப்பதும் அதன் சித்தாந்தங்களை புறக்கணிக்கும் நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x