Last Updated : 12 Feb, 2021 04:17 PM

Published : 12 Feb 2021 04:17 PM
Last Updated : 12 Feb 2021 04:17 PM

ஜிஎஸ்டி பெயரில் உழைப்பையும், வியர்வையையும் உறிஞ்சுகிறீர்கள்: மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றச்சாட்டு

புதுடெல்லி

ஜிஎஸ்டி பெயரில் தங்கள் உழைப்பையும், வியர்வையையும் மத்திய அரசு உறிஞ்சுகிறது என்றும், உரிய பங்கான ரூ.15,475 கோடியை இன்றுவரை மத்திய அரசு தர மறுப்பதாகவும் பட்ஜெட் விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று கரூர் மக்களவைத் தொகுதி எம்.பி. ஜோதிமணி பேசியதாவது:

”ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாகத் தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது நரேந்திர மோடியின் அரசாங்கம்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலாவது தன் கடைக்கண் பார்வையை தமிழகத்தின் பக்கம் திருப்பும் என்று நினைத்தோம். ஆனால், தமிழகத்திற்குக் கிடைத்ததெல்லாம் நிதியமைச்சர் பெரிய மனதோடு வாசித்த ஒரு திருக்குறள்தான்!

அதையும் கடைப்பிடிப்பதில்லை என்ற உன்னதமான கொள்கையை வேறு இந்த அரசு கொண்டிருக்கிறது.

ஒரு லட்சத்து மூவாயிரம் கோடி மதிப்பீட்டில் சாலை வசதி செய்வதாகச் சொல்லி இருக்கிறீர்கள். மதுரையில் ஒரே ஒரு செங்கல்லை நட்டுவிட்டு அதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கும் இன்றுவரை கதை சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே!

அதேபோல்தான் இதுவும். இதையெல்லாம் நம்புவதற்கு தமிழ் மக்களாகிய நாங்கள் யாரும் முட்டாள்கள் அல்ல.

இதுவரை சொன்ன எதைத்தான் நீங்கள் செய்து இருக்கிறீர்கள்? உங்களை நம்புவதற்கு? ஒரு வருடத்திற்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி சொன்னாரே. செய்தீர்களா? விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம் என்று சொன்னீர்களே. செய்தீர்களா? 45 ஆண்டுகளாக இல்லாத அளவில் வேலைவாய்ப்பின்மையை உருவாக்கி இருக்கிறீர்கள்.

ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் இளம் பெண்களும், இளைஞர்களும் கஷ்டப்பட்டுப் படித்துவிட்டு வேலையில்லாமல் இருண்டு கிடக்கும் எதிர்காலத்தை பயத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் நீங்கள் கொடுத்திருக்கும் தீர்வு என்ன? விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய உங்களுக்கு மனமில்லை. அதற்குப் பதிலாக கருப்புச் சட்டங்களை அவர்கள் மீது திணிக்கிறீர்கள். அவர்களை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கிறீர்கள்.

உங்கள் நண்பர்களான அதானி, அம்பானி வகையறாக்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடிகள் வரிச்சலுகையாக கொட்டிக் கொடுத்திருக்கிறீர்கள். ஒரு பெண், அதுவும் தமிழர் நிதியமைச்சராக இருக்கிறீர்கள் என்று ஒரு தமிழகத்துப் பெண்ணாக நான் பெருமைப்படுகிறேன்.

ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் பெண்களை அதிகாரப்படுத்தவும் பாதுகாக்கவும் என்ன செய்திருக்கிறீர்கள்? பெண் கல்விக்கும்,வேலைவாய்ப்பிற்கும் ஏதேனும் சிறப்பு திட்டங்களை அறிவித்து இருக்கிறீர்களா?

நொடிக்கு நொடி பாலியல் வன்கொடுமை, வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க, நீதி வழங்க விரைவு நீதிமன்றங்களை உருவாக்க நிதி ஒதுக்கி இருக்கிறீர்களா? பெண் தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்க பெண்களாலேயே நடத்தப்படும் வங்கிகளைக் காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. ஆனால் அந்த வங்கியைக் கூட உங்களால் காப்பாற்ற முடியவில்லை.

எந்த வங்கியைத்தான் நீங்கள் காப்பாற்றி இருக்கிறீர்கள் இதைக் காப்பாற்ற? உலக அரங்கில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் வரி என்ற பெயரில் ஏழை எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் ஏன் அடிக்கிறீர்கள்? பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மட்டும் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியிருக்கிறீர்கள். எங்கே போனது அந்தப் பணம்?

கல்விக்கோ, மருத்துவத்திற்கோ, விவசாயத்திற்கோ, ராணுவத்திற்கோ நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை. பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு 4000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் கூட மக்களுக்குக் கொடுக்க உங்களுக்கு மனசு வரவில்லை. கரோனா பெருந்தொற்றின்போது மக்கள் வறுமையிலும், பசியிலும் வாடினார்கள்.

குழந்தைகள் பட்டினி கிடந்தன. தாய்மார்கள் கண்ணீர் வடித்தார்கள்? ஏழைகளின் வயிற்றுலும், இதயத்திலும் நெருப்பெறிந்தது. என்ன செய்தீர்கள் நீங்கள்? குடும்பத்திற்கு 500 ரூபாய் கொடுத்த கணக்கை பிரதமர் பெருமையோடு சுட்டிக்காட்டுகிறார். அதற்காக இந்த அரசு வெட்கப்பட வேண்டும்.

உங்களுக்கு நாங்கள் ரூ.500 கொடுக்கிறோம். அதை வைத்து நீங்கள் ஆறு மாதங்களுக்கு வாழ்ந்து காட்டுவீர்களா? அந்த ரூ.20 லட்சம் கோடி எங்கே போனது? உங்கள் ஆருயிர் நண்பர்கள் அம்பானி, அதானி வீடுகளுக்கா? தமிழக அரசின் கடன் ரூ.4,56,660 கோடியாக உயர்ந்துள்ளது.

எங்கள் உழைப்பையும், வியர்வையையும் ஜிஎஸ்டி என்ற பெயரில் உறிஞ்சுகிறீர்கள். அந்தப் பணத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கான ரூ.15,475 கோடியை இன்றுவரை தர மறுக்கிறீர்கள். கஜா புயல் வந்து தமிழகத்தை புரட்டிப்போட்டது.

இன்று வரை இடிந்துபோன வீடுகளைக் கட்ட முடியாமல் மக்கள் அரசாங்க அலுவலங்களின் படிகளில் வேதனையோடு ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைக் காப்பாற்ற என்ன செய்தீர்கள்? இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உங்களுக்கு அடிபணிந்து கிடக்கிறார்.

தமிழகத்தையும் உங்களுக்கு அடிமையாக்கத் துடிக்கிறார். ஆனால், தமிழக மக்கள் ஒருபோதும் அதை அனுமதிக்கமாட்டார்கள்.

உங்களோடு சேர்த்து அதிமுக அரசும் தமிழகத்தின் அரியணையில் இருந்து அகற்றப்படும் அதிமுக அரசு உங்களுக்கு அஞ்சி நடுங்கலாம். தமிழகத்தின் உரிமைகளை நாங்கள் உரத்த குரலில் இங்கு கேட்போம்”.

இவ்வாறு ஜோதிமணி பேசினார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x