Last Updated : 21 Nov, 2015 10:04 AM

 

Published : 21 Nov 2015 10:04 AM
Last Updated : 21 Nov 2015 10:04 AM

சட்ட விரோத கனிம ஏற்றுமதி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது: கர்நாடக மாநில லோக் ஆயுக்தா சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை

கனிமங்களை சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்த வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி அம்மாநில லோக் ஆயுக்தா சிறப்பு புலனாய்வு குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதனால் பெல்லாரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜக‌ தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அமைச் சரவையில் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி சுற்றுலாத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இவர் கர்நாடகா வில் பெல்லாரி, பீஜாப்பூர்,ரெய்ச்சூர் ஆகிய இடங்களில் மட்டுமில்லாமல் ஆந்திராவிலும் பல இடங்களில் சுரங்க தொழிலில் ஈடுபட்டு வந்தார். இதன் மூலம் 2000-ம் ஆண்டில் இருந்து லட்சக்கணக்கான டன் கனிமங்களை சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு ஜனார்த்தன ரெட்டி ஆந்திர மாநிலத்தில் சட்ட விரோதமாக சுரங்க‌த் தொழிலில் ஈடுபட்டதாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து கர்நாடகாவிலும் சட்ட விரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதாக 10-க்கும் மேற்பட்ட‌ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் படிப்படியாக சிபிஐ நீதிமன்றம், ஆந்திர உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் ஜாமீன் பெற்ற ஜனார்த்தன ரெட்டி கடந்த ஜனவரியில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இதனிடையே கர்நாடக லோக் ஆயுக்தா அதிகாரிகள் ஜனார்த்தன ரெட்டி பிலிகெரே துறைமுகத்தில் இருந்து லட்சக்கணக்கான டன் எடையுள்ள கனிம தாதுக்களை சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்த கனிமங்களை திருடியதாகவும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜனார்த்தன ரெட்டிக்கு கடந்த மாதம் அழைப்பாணை அனுப்பப்பட்டது.

3 மணி நேர விசாரணை

இதைத் தொடர்ந்து ஜனார்த்தன ரெட்டி நேற்று காலை பெங்களூருவில் உள்ள லோக் ஆயுக்தா சிறப்பு புலனாய்வு குழுவினரின் முன்னிலையில் ஆஜரானார். அப்போது அதிகாரிகள் அவரிடம் சுமார் 3 மணி நேரம் சட்ட விரோதமாக கனிமங்களை ஏற்றுமதி செய்தது, பிலிகெரே துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்த கனிமங்களை திருடியது மற்றும் நிலக்கரி ஏற்றுமதி குறித்து கேள்வி எழுப்பினர்.

சிறப்பு புலனாய்வு குழுவினரின் கேள்விகளுக்கு ஜனார்த்தன ரெட்டி உரிய விளக்கம் அளிக்கவில்லை. எனவே அதிகாரிகள் அவருக்கு பிடி ஆணை வழங்கி கைது செய்தனர்.

இதையடுத்து ஜனார்த்தன ரெட்டியை எலஹங்கா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதன் பிறகு நேற்று மாலை பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் கர்நாடகாவில் பாஜக தலைவர்களும் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜனார்த்தன ரெட்டியின் சொந்த ஊரான பெல்லாரியில் பல்வேறு இடங்களில் பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அங்கு பதற்றம் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x