Last Updated : 26 Nov, 2015 08:00 AM

 

Published : 26 Nov 2015 08:00 AM
Last Updated : 26 Nov 2015 08:00 AM

ஏழைகளுக்கு பாதகமான கொள்கைகளை அமல்படுத்தி நரேந்திர மோடியின் அரசு தோல்வியடைந்து விட்டது: பெங்களூருவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கல்வி, சுகாதாரம், தொழில் என அனைத்து துறைகளிலும் ஏழைகளுக்கு பாதகமான கொள்கைகளை அமல்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் 'சூட் பூட்' அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பெங்களூருவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

பெங்களூருவில் உள்ள‌ மவுண்ட் கார்மல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று பெங்களூரு வந்தார். கர்நாடக முதல்வர் சித்தரா மையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் அவருக்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து மவுண்ட் கார்மல் கல்லூரி மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ராகுல் காந்தி பேசியதாவது:

மவுண்ட் கார்மல் கல்லூரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரான மார்கிரேட் ஆல்வா, முன்னாள் வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ், பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தர் ஷா உள்ளிட்ட ஏராளமான பெரிய ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. இந்த கல்லூரியில் படித்திருக்காவிட்டால் வாழ்க்கையில் இத்துணை உயரத்தை அடைந்திருக்க முடியாது என மார்கிரேட் ஆல்வா, நிருபமா ராவ் ஆகியோர் என்னிடம் தெரிவித்தார்கள்.

தமிழகத்துக்கு உதவ வேண்டும்

பெண்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென்றால் நாட்டின் நடப்பையும், மக்களின் மனநிலையையும் கவனிக்க வேண்டும். நம்மை சுற்றி நடைபெறும் அனைத்தில் இருந்தும் பாடம் கற்க வேண்டும். ஆந்திராவில் வெற்றிபெற்ற மகளிர் சுய உதவி குழுக்களைப் பார்த்து, உத்தர பிரதேச மகளிர் பாடம் கற்றனர். அதனாலே தற்போது அங்கு வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களில் 1.5 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

அமேதி தொகுதியில் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாலே மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. பெண்களுக்கு தகுதி அடிப்படையில் இடம் கொடுக்கப்படுவதில்லை என்ற போக்கை, நாம் அனைவரும் சேர்ந்துதான் மாற்ற வேண்டும்.

தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ள பாதிப்பை அறிய உயர்மட்ட நிபுணர் குழு அமைத்து, மக்களுக்கு உதவ வேண்டும்.

உரையாடல் அவசியம்

நீண்ட காலமாக போராடி வரும் இரோம் ஷர்மிளாவுடன் காங்கிரஸ் கட்சி பேசி இருக்க வேண்டும். அவரது போராட்டம் ஏற்புடையதா என்பதை பரிசீலிக்க உரையாடல் அவசியம். மக்கள் அமைதியாக வாழ்வதற்கு எதை விரும்புகிறார்கள் என்பதை அறிய உரையாடல் மட்டுமே ஒரே வழி. தனிமனிதனின் சுதந்திரத்தை பற்றி காங்கிரஸ் கட்சி சிந்திக்கிறது. அதற்காக நான் என்றும் போராடுவேன்.

ஜ‌னநாயக நாட்டில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தொடர்ந்து ஆளும் கட்சியுடன் விவாதித்து வருகிறது. ஏழை விவசாயியின் உரிமையை நிலைநாட்ட‌ நில மசோதாவை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்த போது,நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச முற்பட்டால் மைக்கை ஆஃப் செய்து விடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை.

பிரதமர் மோடி 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறுகிறார். பெரிய பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒப்பந்தங்களை போட்டு வருகிறார். ஆனால் யாருக்கும் இதுவரை வேலை கிடைக்கவில்லை. கல்விக்காகவும், சுகாதார தேவைக்காகவும் ஏழை எளிய மக்கள் லட்சக்கணக்கில் செல வழிக்க வேண்டியுள்ளது. வேலையே வழங்காத போது ஏழைகள் எப்படி இவ்வளவு பணத்தை செலவிட முடியும்?

ஏழைகளும், மத்திய வர்க்கத்தினரும் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி வரி சட்டத்தை வடிவமைத்து காங்கிரஸ் கட்சி முதலில் அமல்படுத்தியது. 3 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் அறிமுகப்படுத்திய போது பாஜக கடுமையாக எதிர்த்தது. இப்போது ஜிஎஸ்டி வரி சட்டத்தில் பெரும் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மாற்றங்களை செய்து அமல்படுத்த பாஜக துடிக்கிறது. ஏழைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் காங்கிரஸ் எதிர்க்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் சில குறைகள் நிகழ்ந்ததால், தேர்தலில் தோல்வி அடைந்தோம். இருப்பினும் 20 சதவீத வாக்குகளை பெற்று இருக்கிறோம். தற்போது இளைய தலைமுறையின் ஆக்கப்பூர்வ சிந்தனையோடு காங்கிரஸின் முகத்தை மாற்ற முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம். மத சகிப்பு தன்மை மிக்க, அமைதியான இந்தியாவை உருவாக்குவதற்கு காங்கிரஸ் புதியவர்களின் வழிகாட்டலை எதிர்பார்த்திருக்கிறது.

ஜிஎஸ்டி வரிசட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தை முடக்காமல், ஆக்கப்பூர்வமாக விவாதிக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது. நாட்டை பிரதமர் அலுவலகம் மட்டுமே இயக்குவதை நிறுத்தி விட்டு வெளியூரில் இருக்கும் தலைவர் களெல்லாம் அவைக்கு வர வேண்டும்.

கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, தொழில் என அனைத்து துறைகளிலும் ஏழைகளுக்கு பாதகமான கொள்கைகளை அமல்படுத்தும் சூட் பூட் அரசு அரசு படுதோல்வி அடைந்துள்ளது.

இவ்வாறு ராகுல் பேசினார்.

ராகுலின் கேள்வியும், மாணவிகளின் பதிலும்

மவுண்ட் கார்மல் மாணவிகளுடனான கலந்துரையாடலின் போது ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக, ''தூய்மை இந்தியா திட்டத்தால் ஏதேனும் நன்மை ஏற்பட்டுள்ளதா?'' என கேட்டபோது, சில மாணவிகள் கூட்டமாக, '' ஆம்''என்றும் சிலர், '' இல்லை''என்றும் பதில் அளித்தனர். அரங்கத்தில் இரு தரப்பினரின் கூச்சலும் ஒரே அளவில் இருந்ததால் ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டார். இறுதியில் தானாகவே, 'தூய்மை இந்தியா திட்டம் எங்கேயும் இல்லை''என்றார்.

இதே போல, 'மேக் இன் இந்தியா திட்டம்' செயல்படுகிறதா? எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது?'' என ராகுல் காந்தி கேட்டார். அதற்கும் பெரும்பாலான மாணவிகள் 'இல்லை ' என்றனர். சிலர் மட்டும் ''ஆம்'' என்றனர். அதற்கு ராகுல் சிரித்தபடியே, 'அப்படியானால் உங்களுக்கெல்லாம் வேலை கிடைக்கிறது? உண்மையில் நான் பார்த்தவரை யாருக்கும் வேலை கிடைக்கவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x