Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM

குளிர்கால பிப்ரவரியில் பனிப்பாறை உருகியது ஏன்? - உத்தராகண்டில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதிர்ச்சி

பிப்ரவரி மாதத்தில் பனிப்பாறை உருகியது ஏன் என்பது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் ஜோஷிமத் பகுதியில் நேற்று முன்தினம் பனிப்பாறை உடைந்து உருகி தவுல்கங்கா, அலக்நந்தா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரேனி கிராமத்தில் அமைக்கப்பட்டு வந்த ரிஷி கங்கா தபோவன் நீர்மின் திட்ட கட்டுமானங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த 160 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 16 பேரின் உடல்கள் மட்டும் கண்டெடுக்கப்பட்டன. மற்றவர்கள் வெள்ளத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் பனிப்பாறை உருகியது ஏன் என்பது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தில் பிப்ரவரி மாதமானது கடும் குளிராக இருக்கும். பெரும்பாலான பனிமலைகள் இறுகி பாறையாகவே இருக்கும். பனிப்பாறைகள் உருகாமலேயே இருக்கும். ஆனால் இந்த மாதத்தில்தான் பனிப்பாறைக்கு வெடிப்பு ஏற்பட்டு உடைந்து உருகியுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக இந்த பனிப்பாறையானது வெடித்து உருகியுள்ளது என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வாடியாஇன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜியைச் சேர்ந்தமூத்த விஞ்ஞானி மணீஷ் மேத்தா கூறும்போது, “வழக்கமாக குளிர்காலங்களில் பனிப்பாறைகள் இறுகி உறைந்து காணப்படும். பனிப்பாறைகளின் சுவர்கள் ஒன்றோடு ஒன்று இறுகிகடினமாக இருக்கும். பாறைகள்உருக வாய்ப்பே இல்லை. வழக்கமாக இந்த காலங்களில் பனிப்புயல் அல்லது நிலச்சரிவுகாரணமாகத்தான் பனிப்பாறைகள் உடையும். ஆனால் இந்த பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டு உடைந்தது வித்தியாசமாக உள்ளது. நந்த தேவி மண்டலத்தில் அமைந்துள்ள பனிப்பாறைகள் கடந்த 30 ஆண்டுகளில் சுருங்கி வருகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

புவி வெப்பமடைதலின் தாக்கத்தால் பனிப்பாறைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்து குஷ்இமயமலைப் பகுதியில் வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும், புவி வெப்பமயமாதல் காரணமாகஉலகளாவிய வெப்பநிலையின்உயர்வு, இமயமலைப் பகுதியில்உயரத்தை சார்ந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

பனிப்பாறை வெடிப்பு என்பது மிகவும் அரிதான சம்பவம் ஆகும். செயற்கைக்கோள் மற்றும் கூகுள் எர்த் படங்கள் இப்பகுதிக்கு அருகில் ஒரு பனிப்பாறை ஏரிகள் இருப்பதைக் காட்டவில்லை. ஆனால் இப்பகுதியில் பனிப்பாறைகளுக்குள் ஏரிகள் இருப்பதை உணர்த்துகிறது. அவற்றின் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம். இது, உண்மையிலேயே எப்படி நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்த எங்களுக்கு மேலும் வானிலை அறிக்கைகள் மற்றும் தகவல்கள் தேவை. புவி வெப்பமடைதலால் இப்பகுதி வெப்பமடைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை” என்றார்.

காப்பாற்ற முடியாமல் கிராம மக்கள் வேதனை

ரேனி கிராமத்தில்தான் நீர் மின் திட்ட கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடைபெற்று வந்தன. சம்பவம் குறித்து ரேனி கிராம பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் சங்கராம் சிங் ராவத் கூறும்போது, “நீர்மின் திட்டப் பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆற்றில் நீர்வரத்து மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் திடீரென வெள்ளம் பாய்ந்தோடி வந்தது. அப்போது எல்லோரும் ஓடுங்கள் என்று கூக்குரல் கேட்டது.

அப்போது ரேனி கிராமத்தைச் சேர்ந்த அனிதா தேவி உள்ளிட்டோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை எங்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் காப்பாற்ற முடியவில்லை” என்றார்.

இதே கிராமத்தைச் சேர்ந்த குந்தன் கூறும்போது, “ஆடு மேய்க்கச் சென்ற சிலரையும் வெள்ளம் கொண்டு போய்விட்டது. இங்கு நீர்மின் திட்டம் அமைக்க வேண்டாம் என்று நானும், சங்கராம் சிங்கும் போராட்டம் நடத்தினோம். இப்போது இங்கு நீர்மின் திட்டத்தை அமைக்க வேண்டாம் என்று இயற்கையே சொல்லிவிட்டது” என்றார்.

விஞ்ஞானிகள் ஆய்வு: இதனிடையே பனிப்பாறை உடைந்து உருகிய இடத்தில் ஸ்னோ அன்ட் அவலாஞ்ச் ஸ்டடி எஸ்டாபிளிஷ்மெண்ட் (எஸ்ஏஎஸ்இ), மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள் குழு ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு நடத்தியது. டெல்லியிலிருந்து டேராடூனுக்கு வந்த அவர்கள் ஹெலிகாப்டரில் சென்று சில மணி நேரம் இந்த ஆய்வை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x