Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

விவசாயிகள் பிரச்சினையில் நடிப்பை நிறுத்தி, பேச்சை தொடங்குங்கள்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

விவசாயிகள் பிரச்சினையில் நடிப்பை நிறுத்திவிட்டு, பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி யுள்ளன.

மாநிலங்களவை நேற்று கூடியதும் விவசாயிகள் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. வேளாண் சட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கினார்.

அவையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் குமார்ஜா பேசும்போது, "நாட்டின் ஜனநாயகம் மிகவும் வலுவாக உள்ளது. யாருடைய ட்வீட் பதிவும் நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முடியாது. ஆனால் விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் விதம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி வருகிறது. போராடும் விவசாயிகளுக்கு குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. கழிப்பறை வசதி நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்கும் செல்ல முடியாத வகையில் முள்வேலி, கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்கப்படுகிறது. விவசாயிகள் பிரச்சினையில் நடிப்பை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும்" என்றார்.

பாஜக எம்பி ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறும்போது, "கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த சீர்திருத்தங்களே புதிய வேளாண் சட்டங்களில் இடம்பெற்றுள்ளன. ஆனால் காங்கிரஸ் உள்நோக்கத்துடன் வேளாண் சட்டங்களை எதிர்க்கிறது. விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்மூலம் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும்" என்றார்.

காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் பேசும்போது, "காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவாக பேசிய அதே பாணியில் பாஜக அரசுக்கு ஆதரவாகவும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசுகிறார். அவர் எந்தக் கட்சிக்கு சென்றாலும் அவருக்கு எங்களது ஆசி எப்போதும் உண்டு" என்று வாழ்த்தினார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

கடந்த ஆண்டு ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரயன் கூறும்போது, "விவசாயிகளின் போராட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து ஆதரவு கிடைக்கிறது. ஆனால் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது" என்றார்.

மதச்சார்பற்ற ஜனதா தளதலைவர் தேவ கவுடா பேசும்போது, "விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறையை கண்டிக்கிறேன். ஆனால் அதற்கு விவசாயிகள் காரணம் கிடையாது. சில சமூகவிரோதிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்" என்றார்.

மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, "மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. கடந்தகாங்கிரஸ் ஆட்சியைவிட தற்போது விவசாயிகளிடம் இருந்து அதிக தானியங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. கூடுதல் விலை வழங்கப்படுகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x