Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

கல்லூரி கட்டண பாக்கியை செலுத்தி சான்றிதழைப் பெறுவதற்காக ஒடிசாவில் கூலி வேலை செய்யும் மாணவி

புவனேஸ்வரம்

ஒடிசா மாநிலம், புரி மாவட்டம் காரடிபிதா கிராமத்தைச்சேர்ந்தவர் ரோஜி பெகேரா (20). இவர் தனியார் கல்லூரியில் கடந்த 2019-ம் ஆண்டில் டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்தார். ஆனால் குடும்பத்தின் வறுமை காரணமாக கல்விக் கட்டணத்தில் ரூ.25,000-ஐ செலுத்தமுடியவில்லை. இதன் காரணமாக கல்லூரி நிர்வாகம், அவருக்கு கல்விச் சான்றிதழை வழங்கவில்லை.

ரோஜி பெகேராவுக்கு 4 தங்கைகள் உள்ளனர். இதில் ஒரு தங்கை பி.டெக். படித்து வருகிறார். மற்றொரு தங்கை 12-ம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் 3 பேரும் தற்போது நூறு நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். நாள்தோறும் 3 பேருக்கும் தலா ரூ.207 ஊதியம் கிடைக்கிறது. இதன்மூலம் பணம் சேர்த்து கல்விக் கட்டணத்தை செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ரோஜி பெகேரா கூறியதாவது:

நாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். எனது பெற்றோருக்கு என்னையும் சேர்த்து5 மகள்கள் உள்ளனர். எங்களுக்குசொந்தமாக விவசாய நிலமோ,வீடோ கிடையாது தாயும் தந்தையும் கூலி வேலை செய்கின்றனர்.

நானும் எனது தங்கைகளும் படித்து முன்னேற விரும்புகிறோம். கடந்த 2019-ம் ஆண்டிலேயே டிப்ளமோ படிப்பை நிறைவு செய்துவிட்டேன். ஆனால் முழு கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் கல்விச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இப்போது நூறு நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து சிறுக, சிறுக பணம் சேர்த்து வருகிறேன். எனது இரு தங்கைகளும் என்னோடு சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். கடைசி இரு தங்கைகள் 7, 5-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் சிறுமிகள் என்பதால் வேலைக்கு அழைத்து வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடிகை நிதியுதவி

ரோஜி பெகேரா குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து ஒடியா திரைப்பட நடிகை ராணி பாண்டா கூறும்போது, "கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக மாணவி ரோஜி கூலி வேலை செய்து வரும் செய்தியை அறிந்து அவரது வங்கிக் கணக்குக்கு ரூ.25,000 அனுப்பியுள்ளேன். அவர் மேல்படிப்பை தொடரவும் உதவி செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x